search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி குழுமம் 6 நாட்களில் ரூ.9 லட்சம் கோடியை இழந்தது
    X

    அதானி குழுமம் 6 நாட்களில் ரூ.9 லட்சம் கோடியை இழந்தது

    • கடந்த 6 நாட்களில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 26.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது.
    • இந்திய வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளே அதானி குழுமத்திற்கு 90 சதவீதத்திற்கு அதிகமான கடன்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை கூறியது.

    இதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பும், கடும் சரிவை சந்தித்தது.

    கடந்த 24-ந் தேதி வரை உலக பணக்கார பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி தற்போது முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல் முகேஷ்அம்பானிக்கு பின் சென்று விட்டார். இதன் மூலம் கவுதம்அதானி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலையையும் இழந்துள்ளார்.

    இந்நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், எப்.பி.ஓ. பங்குகள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி திரட்டும் திட்டத்தையும் நேற்று ரத்து செய்தது.

    இதுஒரு புறம் இருக்க, பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் 6 நாட்களில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி (100 பில்லியன் டாலர்) அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.

    அதாவது கடந்த 6 நாட்களில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 26.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது. அதானி டோடல் கேஸ் நிறுவனம் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 10 சதவீதம், அதானி துறைமுகங்கள் 6.1 சதவீதம், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் 10 சதவீதம், என்.டி.டி.வி. பங்குகள் 5 சதவீதம், அதானி பவர் 5 சதவீதம், அதானி வில்மர் 22.4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. ஏ.சி.சி. லிமிடெட் 0.1 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 5.3 சதவீதமும் உயர்ந்துள்ளது.

    இதன் மூலம் அதானி குழுமத்தில் 10 நிறுவனங்கள், 8 நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு வங்கிகளிடம் பாரத ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. வங்கிகளிடம் இருந்து அதானி குழும நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.2.1 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன. இவற்றின் இந்திய வங்கிகள் வழங்கிய கடன் மட்டும் சுமார் 40 சதவீதம் என கூறப்படுகிறது.

    இந்திய வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளே அதானி குழுமத்திற்கு 90 சதவீதத்திற்கு அதிகமான கடன்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.22 ஆயிரம் கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7 ஆயிரம் கோடியையும், பரோடா வங்கி ரூ.7 ஆயிரம் கோடியையும் அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்ற வங்கிகள் கடன் விபரங்களை வெளியிடவில்லை.

    இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிகள் அதானி குழுமங்களுக்கு வழங்கிய கடன் விபரங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×