என் மலர்
இந்தியா

5 வயது சிறுமி என்றும் பாராமல்.. கேரளாவில் நடந்த கொடூரம்
- சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.
- குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு.
கொச்சி:
கேரள மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கேரளாவின் கொச்சி அருகே உள்ள அலுவா நகரில் தங்கியிருந்து பணியாற்றி வந்த பீகார் தம்பதியரின் 5 வயது குழந்தை வெள்ளிக்கிழமை மாலையில் காணாமல் போனது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.
மறுநாள் அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு பின்புறம் சிறுமியின் சடலம் கண்டறியப்பட்டது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது.
போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில், அவனும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி என்பதும், சிறுமியின் குடும்பத்தினர் தங்கியிருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டபோது அந்த குற்றவாளி போதையில் இருந்ததாகவும், நேற்று காலை போதை தெளிந்ததும் விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காவல்துறை மீது எதிர்க்கட்சி தலைவர் சதீசன் குற்றம்சாட்டியிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட நபர் குழந்தையைக் கடத்திச் சென்றது தெளிவாகத் தெரிந்த பிறகும் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கூறினார்.
"கேரளாவில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை அதிகமாக பயன்படுத்தியமையே இந்த குற்றத்திற்கு காரணம் என போலீசார் கூறுகிறார்கள். மது மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் சதீசன் வலியுறுத்தினார்.






