search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வருமானத்திற்கு குடும்பத்தை எதிர்பார்க்கும் 47 சதவீதம் முதியோர்
    X

    வருமானத்திற்கு குடும்பத்தை எதிர்பார்க்கும் 47 சதவீதம் முதியோர்

    • இந்தியாவில் 22 நகரங்களில் சுமார் 4399 முதியோர் மற்றும் அவர்களை பராமரிக்கும் 2200 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
    • 34 சதவீதம் பேர் அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் மற்றும் வங்கியில் உள்ள சேமிப்பு பணத்தையே நம்பி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கம் 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

    நாடு முழுவதும் பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகள் குறித்த தகவல்களை தேசிய குடும்ப சுகாதார மையம் கணக்கெடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் நிலை எப்படி இருக்கிறது? என்பது பற்றிய ஆய்வை தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற நிறுவனம் மேற்கொண்டது.

    இந்தியாவில் 22 நகரங்களில் சுமார் 4399 முதியோர் மற்றும் அவர்களை பராமரிக்கும் 2200 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இதன் முடிவுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் சுப்பிரமணியம் வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில் நாடு முழுவதும் சுமார் 47 சதவீதம் முதியோர் வருமானத்திற்கு குடும்பத்தினரை எதிர்பார்த்தே உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. 34 சதவீதம் பேர் அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் மற்றும் வங்கியில் உள்ள சேமிப்பு பணத்தையே நம்பி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதில் 40 சதவீதம் பேர் முடிந்தவரை வேலை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளனர். இது தவிர 52 சதவீதம் முதியவர்கள் தங்களுக்கு போதிய வருமானம் இல்லை என்றும், 40 சதவீதம் பேர் பாதுகாப்பாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    ஆய்வில் 45 சதவீதம் பேர் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் 71 சதவீதம் பேர் வேலை எதுவும் செய்யவில்லை என்றும், 36 சதவீதம் பேர் வேலை செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், 40 சதவீதம் பேர் முடிந்தவரை வேலை செய்ய விரும்புவதாகவும் கூறினர்.

    அதே நேரம் 30 சதவீதம் பேர் தங்கள் நேரத்தை தன்னார்வ தொண்டு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

    குறிப்பாக தங்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் அருகிலேயே கிடைப்பதாக சுமார் 87 சதவீதம் முதியவர்கள் தெரிவித்தனர். 78 சதவீத முதியவர்கள் தங்களுக்கு ஆன்லைன் மூலமான ஹெல்த்கேர் வசதிகள் சரியாக கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

    இதுபோல 67 சதவீதம் முதியவர்கள் தங்களுக்கு மருத்துவ காப்பீடு எதுவும் இல்லை எனவும், 13 சதவீதம் பேர் மட்டுமே அரசின் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    முதியோருக்கு கொடுமை நடப்பதாக சுமார் 59 சதவீதம் பேர் தெரிவித்தனர். 10 சதவீதம் பேர் தாங்களே நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர்.

    இதுதொடர்பாக ஹெல்ப் ஏஜ் நிறுவனம் கூறும்போது முதியோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதிம் அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

    இதுபோல ஆய்வறிக்கையை வெளியிட்ட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் சுப்பிரமணியம் கூறும்போது, மூத்த குடிமக்கள் தொடர்பான புதிய தேசிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.

    ஒரு சில மாதங்களில் இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும், என்றார்.

    Next Story
    ×