search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஆஷிஷ் மிஸ்ராவை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்த வந்த காட்சி.
    X
    கைதான ஆஷிஷ் மிஸ்ராவை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்த வந்த காட்சி.

    லகிம்பூர் வன்முறை தொடர்பாக கைதான மத்திய மந்திரி மகன் சிறையில் அடைப்பு

    கைதான ஆஷிஷ் மிஸ்ராவை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதாக அரசுத்தரப்பு வக்கீல் கூறினார்.
    லக்னோ :

    உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். மோதிய கார்களில் ஒன்றில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர்.

    இந்த குற்றச்சாட்டை அஜய் மிஸ்ராவும், ஆஷிஷ் மிஸ்ராவும் மறுத்தனர். இருப்பினும், ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க டி.ஐ.ஜி. உபேந்திர அகர்வால் தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய மந்திரி மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதற்கு அவர் ஆஜராகாததால், 2-வது தடவையாக சம்மன் அனுப்பினர். அதை ஏற்று நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் லகிம்பூர் கேரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிறப்பு விசாரணை குழு முன்பு அவர் ஆஜரானார். 12 மணி நேரமாக அவரிடம் விசாரணை நடந்தது. அதன் முடிவில், இரவு 11 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

    அங்கேயே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நள்ளிரவில் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    அதன்படி, மாவட்ட சிறையில் ஆஷிஷ் மிஸ்ரா அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசுத்தரப்பு வக்கீல் எஸ்.பி.யாதவ் கூறினார்.

    இதற்கிடையே, லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது.

    இதை ஏற்காவிட்டால், 18-ந் தேதி நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டமும், 26-ந் தேதி கிசான் மகாபஞ்சாயத்து என்ற பெயரில் மாநாடும் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே, திகோனியா போலீஸ் நிலையத்தில் இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது பா.ஜனதாவினருடன் காரில் சென்ற சுமித் ஜெய்ஸ்வால் என்பவர் அளித்த புகாரின்பேரில், பெயர் குறிப்பிடப்படாத கலவரக்காரர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில், தாங்கள் காரில் சென்றபோது, விவசாயிகளுடன் கலந்திருந்த சமூக விரோதிகள், தங்கள் காரை கம்புகளாலும், கற்களாலும் தாக்கியதாகவும், 2 பா.ஜனதாவினர், கார் டிரைவர், ஒரு பத்திரிகையாளர் ஆகியோரை கொலை செய்ததாகவும் சுமித் ஜெய்ஸ்வால் கூறிய தகவல் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால், விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்டதாகவோ, மத்திய மந்திரியின் மகன் அந்த காரில் இருந்ததாகவோ அதில் எதுவும் கூறப்படவில்லை.
    Next Story
    ×