search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தா
    X
    நித்யானந்தா

    மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்று விட்டேன்: நித்யானந்தா அறிவிப்பால் பரபரப்பு

    மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார்.
    புதுடெல்லி:

    கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவானார்.

    அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் கைது நடவடிக்கைகள் முடங்கி உள்ளது.

    இதை பயன்படுத்தி நித்யானந்தா சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் தன்னை மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். இந்நிலையில் 293-வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்று கொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளதாகவும் அந்த பதிவுகளில் அவர் தெரிவித்து உள்ளார்.

    அருணகிரிநாதருடன் நித்யானந்தா (பழைய படம்)

    மேலும் தனது பெயரை 293-வது ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் மாற்றி கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தில் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 2019-ம் ஆண்டு அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில்தான் நித்யானந்தா தற்போது தன்னை மதுரை ஆதீனம் என அறிவித்து கொண்டதோடு, பதவி ஏற்று கொண்டதாகவும் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் அருணகிரி நாதருடன் தான் இருக்கும் பழைய படத்தையும் சேர்த்து பதிவிட்டு உள்ளார்.



    Next Story
    ×