search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாதது ஏன்?: நிர்மலா சீதாராமன் விளக்கம்

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரூ. 1.44 லட்சம் கோடியளவில் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டிருந்ததால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கண்மூடித்தனமாக உயர்ந்துள்ளது. இதனால் பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் மத்திய அரசு எரிபொருள் விலையை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

    தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு கலால் வரியில் சிறிதளவு குறைக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாததற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில் ‘‘முந்தைய காங்கிரஸ் அரசு எரிபொருட்கள் விலையை குறைக்க 1.44 லட்சம் கோடி ரூபாய் அளவில் எண்ணெய் பத்திரங்கள் வெளியிட்டது. முன்னாள் அரசின் தந்திர விளையாட்டிற்கு என்னால் போக முடியாது. எண்ணெய் பத்திரங்கள் காரணமாக மத்திய அரசுக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் எங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க இயலவில்லை.

    தற்போதைக்கு எரிபொருள் மீதான கலால் வரியை குறைப்பதற்கான வழியில்லை. கடன் பத்திரத்திற்கு வட்டி செலுத்தி வருவதால் கடன் சுமை ஏற்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 70,195.72 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது.

    2026 வரை நாம் இன்னும் 37 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், 1.30 லட்சம் கோடி ரூபாய் கடன் நிலுவை உள்ளது.

    மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசுகள் விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை.  எண்ணெய் பத்திரங்களின் கடன் சுமை என்னிடம் இல்லையென்றால், எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்கும் நிலையில் நான் இருந்திருப்பேன்’’ என்றார்.
    Next Story
    ×