search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ஜெயலலிதாவின் ரூ. 113 கோடி சொத்துக்கள் யாருக்கு சேரும்?
    X

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ஜெயலலிதாவின் ரூ. 113 கோடி சொத்துக்கள் யாருக்கு சேரும்?

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு சேரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
    பெங்களூர்:

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. ஆனால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ. 100 கோடி அபராதத் தொகையை உறுதி செய்து கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்திருந்தனர்.

    இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவருக்காக விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை எப்படி வசூலிக்கவேண்டும் என்று தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமீத்வாய்ராய் ஆகியோர் நேற்று கர்நாடகாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தனர்.

    மேலும் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்ததை மறு பரிசீலனை செய்ய முடியாது என்றும் அவர்கள் அறிவித்தனர். ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை கட்ட தேவை இல்லை என்றும் உத்தரவிட்டனர்.



    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு தற்போது கர்நாடக நீதிமன்றத்தில் முடங்கி கிடக்கும் 10 ஆயிரத்து 500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 1 கோடி மதிப்புள்ள வைர நகைகள், 44 ஏர்கன்டி‌ஷன் எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இந்த பொருட்களை கோர்ட்டில் மனு செய்து பெறுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ. 113 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் யார் பிரித்துக் கொள்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



    ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் கிடையாது. அவரது அண்ணன் ஜெயராமனின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளது.

    தமிழக அரசு விரும்பினால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம். இந்த இல்லத்தை அரசு எடுத்துக் கொள்ளலாம்.

    அதேபோல ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக கோர்ட்டு பராமரிப்பில் உள்ள பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி கர்நாடக கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கும் தொடரலாம்.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகன், மகள் ஆகியோரும் இந்த பொருட்களை கேட்டு மனு தாக்கல் செய்யலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.



    தமிழக அரசுடன் தீபக் மற்றும் தீபா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை உருவாக்கி அதன்பிறகு தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சொத்துக்களை பெற முடியும்.

    இதுகுறித்து பெங்களூரை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் மொத்தம் ரூ.113 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் அசையும் சொத்துக்கள் ரூ. 41கோடியே 64 லட்சம் ஆகும். அசையா சொத்துக்கள் ரூ. 72 கோடியே 9 லட்சம் ஆகும்.

    ஜெயலலிதாவின் சொத்துக்களில் மிக அதிக மதிப்புடையது சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வேதா நிலைய பங்களா வீடாகும்.

    தற்போது இந்த வீட்டின் மதிப்பு ரூ. 90 கோடி வரை இருக்கும் என்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழக அரசின் வழிகாட்டி மதிப்பின்படி இந்த சொத்தின் மதிப்பு ரூ.43 கோடியே 96 லட்சம் ஆகும்.

    இதுதவிர ஜெயலலிதாவுக்கு சென்னையில் 3 வணிக வளாகங்களும், ஐதராபாத்தில் ஒரு வணிக வளாகமும் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 13 கோடியே 30 லட்சம் ஆகும்.

    தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஜெயலலிதா பெயரில் 14.50 ஏக்கரில் பண்ணை நிலம் உள்ளது. மதுராந்தகம் அருகே செய்யூர் கிராமத்தில் ஜெயலலிதா பெயரில் 3.43 ஏக்கரில் நிலம் உள்ளது.

    பல்வேறு வங்கிகளில் ஜெயலலிதா பெயரில் 10 கோடியே 63 லட்சம் ரூபாய் உள்ளது. மேலும் 2 டொயோட்டா கார்கள், ஒரு டெம்போ டிராவலர், ஒரு டெம்போ டிராக்ஸ், 2 மகேந்திரா வேன்கள், ஒரு சுவராஜ் மஸ்தா கார், ஒரு அம்பாசிடர், ஒரு கண்டஷா கார் ஆகியன உள்ளன. இந்த வாகனங்களின் மதிப்பு 42 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.

    கொடநாடு எஸ்டேட், பங்களா, ஸ்ரீ விஜயா பப்ளிகே‌ஷன், சசி எண்டர்பிரைசஸ், ராயல்வேலி மற்றும் கிரீன் டீ எஸ்டேட் ஆகிய 5 சொத்துக்களில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். இந்த வகையில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ. 24 கோடியே 44 லட்சமாக உள்ளது.

    ஜெயலலிதா மறைந்து விட்டதால் அவரது சொத்துக்கள் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது.

    ஜெயலலிதா உயில் எழுதி வைத்து இருந்தால் அந்த உயில்படி அதில் யாருக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறதோ அவருக்குத்தான் சொத்துக்கள் சேரும்.

    சொத்துக்களுக்கு அவர் உயில் எழுதி வைக்கவில்லை என்றால் அவர் சம்பந்தப்பட்ட வாரிசுகள் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாட முடியும்.

    ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என்பதால் அவரது அண்ணன் ஜெயராமனின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் இந்த சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியும். ஆனாலும் அவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்.

    தமிழக மக்கள் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஒருவேளை தமிழக அரசு அந்த வீட்டை நினைவு இல்லமாக ஆக்க விரும்பினால் அதுகுறித்து தீபா, தீபக் ஆகியோருடன் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் கோர்ட்டில் மனு செய்து அந்த இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்குவதற்கு எடுத்துக் கொள்ளலாம். அல்லது அந்த சொத்துக்குரிய பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த சொத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

    அதேபோல ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு தற்போது கர்நாடக கோர்ட்டு பராமரிப்பில் உள்ள பொருட்களையும் தமிழக அரசு மனு செய்து பெற்று அவற்றை போயஸ் கார்டனில் வைத்துக் கொள்ளலாம். இந்த பொருட்களை பெறுவதற்கு தீபக், தீபாவுக்கும் உரிமை உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு விட்டதால் அவருடைய படங்களை தமிழக அரசு அலுவலகங்களில் வைக்கலாம் அதற்கு தடை இல்லை.

    அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். அதற்கான தடையும் நீங்கி விட்டது.
    Next Story
    ×