என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் 4 ராணுவ முகாம்கள் அழிப்பு- இந்திய ராணுவம் பதிலடி
    X

    பாகிஸ்தானில் 4 ராணுவ முகாம்கள் அழிப்பு- இந்திய ராணுவம் பதிலடி

    இந்தியா எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் 4 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதனால் கடும் கோபம் அடைந்த இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சரியான பதிலடி கொடுத்தது.

    இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கிருந்த தீவிரவாதிகள் முகாம்களை அழித்தனர்.

    சர்ஜிகல் ஆபரே‌ஷன் என்ற இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தான் ராணுவம் அங்கிருந்தபடி பீரங்கி மற்றும் எந்திர துப்பாக்கிகளால் தொடர்ந்து சுடுகிறது. அதற்கு நமது ராணுவ வீரர்களும், எல்லை பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    கடந்த 27-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்து மீறல் அதிகரித்தது. அவர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேரும், பொது மக்கள் 2 பேரும் பலியானார்கள்.

    இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் இந்திய ராணுவமும் எதிர் தாக்குதல் நடத்தியது. 12 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் கொல்லப்பட்டனர்.

    இது, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகளை ஊடுருவ செய்தனர்.

    குப்வாரா பகுதியில் ஊடுருவிய அந்த தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர் சந்தீப் சிங் ராவத்தை பிடித்து சென்றனர். பின்னர் அவர் தலையை துண்டித்து உடலை துண்டு துண்டாக வெட்டி இந்திய எல்லைக்குள் வீசினார்கள்.

    இந்த சம்பவம் இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவ தளபதிகள் முடிவு செய்தனர்.

    இதனால் நேற்று இரவு எல்லைப் பகுதியில் அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டது. அவர்கள் அங்குள்ள ஹெரன் பகுதியில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். பீரங்கிகள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டது. குண்டுகளும் வீசப்பட்டன.

    இதில், பாகிஸ்தான் ராணுவத்தின் 4 முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. அங்கு ஏராளமான ராணுவ வீரர்கள் இருந்தனர். அவர்களில் பலர் இந்த குண்டு வீச்சுக்கு பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    ஆனால், எத்தனை வீரர்கள் இறந்தார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. அந்த பகுதியில் விடிய, விடிய தாக்குதல் நடந்தது.

    இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மெக்கில் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். நீண்ட நேரம் அங்கு சண்டை நடந்தது.

    பாகிஸ்தான் தாக்கியதில் இந்திய வீரர் கோலி நிதின் சுபாஷ் (வயது 28) உயிர் இழந்தார். இவர், மராட்டிய மாநிலம் சாங்கிலி என்ற இடத்தை சேர்ந்தவர்.

    எல்லைப் பகுதியில் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

    நேற்று இரவு இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் இன்று பெரிய அளவில் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவமும் தயார் நிலையில் உள்ளது.

    Next Story
    ×