என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த விவகாரம்: சமாஜ்வாடி கட்சி எம்.பி.யின் உதவியாளர் கைது
    X

    ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த விவகாரம்: சமாஜ்வாடி கட்சி எம்.பி.யின் உதவியாளர் கைது

    ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த விவகாரத்தில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முன்வார் சலீம் எம்.பி.யின் நேர்முக உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூத் அக்தர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மவுலானா ரம்சான்கான் மற்றும் சுபாஷ் ஜாங்கிர் ஆகியோருடன் சேர்ந்து ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர், மெகமூத் அக்தர் பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டார். கைதான மற்ற இருவரிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முன்வார் சலீம் எம்.பி.யின் நேர்முக உதவியாளர் பராத் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதை குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.

    இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள முன்வார் சலீம் எம்.பி. வீட்டில் இருந்த பராத்திடம் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதற்கட்ட விசாரணை தொடங்கினர். நேற்று மதியம் வரை நீடித்த இந்த விசாரணையில், பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. பல முக்கிய பிரமுகர்களின் பெயரும் அடிபட்டது.

    மேலும், இந்த விவகாரத்தில், பராத் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் ஒப்படைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனிடையே, பராத் கைது செய்யப்பட்டது குறித்து முன்வார் சலீம் எம்.பி.யிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, “தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் என்னிடம் போலீசார் விசாரணை நடத்தினால், அதற்கு ஒத்துழைப்பு அளிப்பேன்” என்றார்.

    ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த விவகாரத்தில், சமாஜ்வாடி கட்சி எம்.பி.யின் நேர்முக உதவியாளர் கைதானது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×