என் மலர்

  செய்திகள்

  சவுமியா கொலை வழக்கு தீர்ப்பு குறித்து விமர்சித்த கட்ஜுவை சுப்ரீம் கோர்ட்டு விவாதிக்க அழைப்பு
  X

  சவுமியா கொலை வழக்கு தீர்ப்பு குறித்து விமர்சித்த கட்ஜுவை சுப்ரீம் கோர்ட்டு விவாதிக்க அழைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சவுமியா கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விமர்சித்த முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவை சுப்ரீம் கோர்ட்டு விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது.
  புதுடெல்லி:

  சவுமியா கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விமர்சித்த முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவை சுப்ரீம் கோர்ட்டு விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது.

  கேரளாவில் ஓடும் ரெயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 7 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பரில் உத்தரவிட்டது. கோவிந்தசாமியின் மரண தண்டனையை 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டதை விமர்சித்து முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜு செப்டம்பர் 17-ம் தேதியன்று தனது வலைப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

  சவுமியா ரெயிலில் இருந்து குதித்தார், கோவிந்தசாமி தள்ளிவிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்த கட்ஜு “கேள்விப்பட்ட தகவலை” சாட்சியமாக நம்புகிறது கோர்ட்டு என்று விமர்சித்து இருந்தார். “சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட கேள்விப்பட்ட தகவலை சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அரிச்சுவடியை அறிந்தே வைத்திருப்பர்.” தீர்ப்பு ‘மிகப்பெரிய தவறு’, சட்ட உலகில் பல ஆண்டுகளாக இருந்து வரும் நீதிபதிகளிடமிருந்து இத்தகைய தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்றும் கட்ஜு வேதனை தெரிவித்திருந்தார்.

  சவுமியா கொலை வழக்கில் கோவிந்தசாமி கொலை குற்றவாளி இல்லை என்று கூறியிருப்பதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு மிகக்கொடிய தவறை செய்து விட்டது. கொலை வழக்கு தொடர்பான சட்டப்பிரிவு ஐபிசி 300-ஐ சுப்ரீம் கோர்ட்டு கவனிக்க தவறிவிட்டது. அதில் கொலைக்கான வரையறை குறித்து 4 பகுதிகள் உள்ளன. அதில் முதல் பகுதியானது கொலை செய்யத் தேவையான நோக்கம் பற்றி தெளிவுபடுத்துகிறது. மற்ற 3 பகுதிகளும் என்ன சொல்கிறது என்றால் கொலை செய்வதற்கு எந்தவித நோக்கமும் இல்லை என்றாலும், கொலையே என்கிறது.

  300-வது சட்டப்பிரிவை சுப்ரீம் கோர்ட்டு கவனமாக படிக்காதது வருந்தத்தக்கது. எனவே தீர்ப்பை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார் கட்ஜு.

  கட்ஜுவின் இந்தப் பதிவை தாமாகவே கவனத்தில் எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகய், பி.சி.பண்ட், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு சட்டத்தில் யார் சரி? கட்ஜுவா அல்லது கோர்ட்டா என்பதை கட்ஜு சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஓய்வு பெற்ற நீதிபதி கட்ஜு எழுதிய வலைப்பதிவை கவனத்தில் கொண்டு சவுமியா கொலை வழக்கில் கோர்ட் சரியா அல்லது அவர் கூற்று சரியா என்பதை நேரில் ஆஜராகி விவாதிக்க அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

  கட்ஜு மீது தங்களுக்கு அதிக மரியாதை இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், ஏன் தங்கள் தீர்ப்பு அடிப்படையில் தவறானது என்று கட்ஜு கூறுகிறார் என்பதை நேரில் சுப்ரீம் கோர்ட்டில் அவருடன் விவாதிக்க தயார் என்று தெரிவித்துள்ளனர்.

  மேலும் கட்ஜுவுடன் இந்த விவாதம் நடைபெறாமல் கோவிந்தசாமி தண்டனைக்குறைப்பை எதிர்த்து கேரள அரசும், சவுமியாவின் தாயாரும் செய்திருந்த தனித்தனியான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை குறித்து எந்த முடிவையும் தெரிவிப்பது ‘முறையாகாது’ என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

  வழக்கு விபரம்:-

  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சவுமியா (வயது 23) என்ற இளம்பெண் கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 1–ந்தேதி எர்ணாகுளம்–சோரனூர் ரெயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அந்த ரெயிலின் பெண்களுக்கான பெட்டியில் சவுமியா மட்டும் இருந்தார்.

  திருச்சூர் மாவட்டத்தின் வள்ளத்தோல் நகர்–சொர்னூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டிருந்த போது கை ஊனமுற்ற ஒருவர் சவுமியா இருந்த பெட்டியில் திடீரென நுழைந்து, அவரை வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்றார். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற சவுமியாவை ஓடும் ரெயிலில் இருந்து அந்த மாற்றுத்திறனாளி கீழே தள்ளிவிட்டார்.

  பின்னர் அவரும் கீழே குதித்து, தண்டவாளத்தில் படுகாயத்துடன் கிடந்த சவுமியாவை ஈவு இரக்கமின்றி கற்பழித்தார். சவுமியா வைத்திருந்த பை உள்ளிட்ட பொருட்களை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

  தலையில் பலத்த காயத்துடன் தண்டவாளம் அருகே மயங்கி கிடந்த சவுமியாவை சிலர் மீட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 6–ந்தேதி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார்.

  இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர்தான் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவந்தது. எனவே அவரை கைது செய்த போலீசார் அவர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

  இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விசாரணை கோர்ட்டு 2012-ம் ஆண்டு கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கேரள ஐகோர்ட்டும் 2013 டிசம்பர் மாதத்தில் உறுதி செய்தது. எனவே இதை எதிர்த்து கோவிந்தசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

  இந்த வழக்கை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, கோவிந்தசாமி மீதான கொலை குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மரண தண்டனையை ரத்து செய்தது. எனினும் கற்பழிப்பு குற்றச்சாட்டை உறுதி செய்த நீதிபதிகள், அவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

  கோவிந்தசாமி தண்டனைக்குறைப்பை எதிர்த்து கேரள அரசும், சவுமியாவின் தாயாரும் தனித்தனியான சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். 
  Next Story
  ×