search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுமியா கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது: மார்கண்டேய கட்ஜூ கருத்து
    X

    சவுமியா கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது: மார்கண்டேய கட்ஜூ கருத்து

    கேரளாவை சேர்ந்த இளம்பெண் சவுமியா கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சட்டத்தின் பெயரில் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஓடும் ரெயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி கற்பழித்து கொலை செய்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 7 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கேரளாவை சேர்ந்த இளம்பெண் சவுமியா கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சட்டத்தின் பெயரில் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கட்ஜூ தனது பேஸ் புக் வலைதளத்தில், “சட்டத்தில் கொலை பற்றிய 300 ஐ.பி.சி பிரிவில் உள்ளவற்றை நீதிமன்றம் சரியாக கவனிக்க தவறிவிட்டது. மொத்தம் நான்கு பிரிவுகள் அதில் உள்ளது. அதில் முதல் பிரிவு மட்டும் கொலைக்கான உள்நோக்கம் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

    மற்ற மூன்று பிரிவுகளில் எந்தவொரு உள் நோக்கம் இல்லை என்றாலும் அது கொலை தான் என்று கூறுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வருந்தத்தக்கது. நீதிமன்றம் சட்டப்பிரிவு 300-ஐ கவனமாக அணுக வேண்டும். இந்த தீர்ப்பானது திறந்த நீதிமன்றத்தில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சவுமியா (வயது 23) என்ற இளம்பெண் கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 1–ந்தேதி எர்ணாகுளம்–சோரனூர் ரெயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அந்த ரெயிலின் பெண்களுக்கான பெட்டியில் சவுமியா மட்டும் இருந்தார்.

    திருச்சூர் மாவட்டத்தின் வள்ளத்தோல் நகர்–சொர்னூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டிருந்த போது கை ஊனமுற்ற ஒருவர் சவுமியா இருந்த பெட்டியில் திடீரென நுழைந்து, அவரை வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்றார். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற சவுமியாவை ஓடும் ரெயிலில் இருந்து அந்த மாற்றுத்திறனாளி கீழே தள்ளிவிட்டார்.

    பின்னர் அவரும் கீழே குதித்து, தண்டவாளத்தில் படுகாயத்துடன் கிடந்த சவுமியாவை ஈவு இரக்கமின்றி கற்பழித்தார். சவுமியா வைத்திருந்த பை உள்ளிட்ட பொருட்களை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    தலையில் பலத்த காயத்துடன் தண்டவாளம் அருகே மயங்கி கிடந்த சவுமியாவை சிலர் மீட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 6–ந்தேதி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார்.
    Next Story
    ×