என் மலர்

  செய்திகள்

  மாயமான ராணுவ விமானத்தில் பயணம் செய்த 29 பேரும் உயிரிழப்பு என அறிவிப்பு: குடும்பத்தினருக்கு தகவல்
  X

  மாயமான ராணுவ விமானத்தில் பயணம் செய்த 29 பேரும் உயிரிழப்பு என அறிவிப்பு: குடும்பத்தினருக்கு தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்று மாயமான ராணுவ விமானத்தில் பயணம் செய்த 29 பேரும் உயிரிழந்து விட்டதாக கருதப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் நகருக்கு கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி காலை 8.30 மணிக்கு, ‘ஏ.என்.32’ என்ற ராணுவ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தை விமானிகள் கத்சாரா, நந்தா இயக்கினர். அவர்களுக்கு துணையாக விமானி குணால் இருந்துள்ளார்.

  விமானப்படை உயர் அதிகாரி தீபிகா, வீரர் சஞ்சீவ் குமார், ராணுவ என்ஜினீயரிங் சேவை பிரிவில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த விமல், கடற்படை ஊழியர்கள் சாம்பவ சிவமூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திரராவ், சேனாதிபதி, பூபேந்திர சிங், மகாரானா, சின்னாராவ், சீனிவாசராவ், பிரசாத் பாபு, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள செம்பூர் கிராமத்தை சேர்ந்த கடலோர பாதுகாப்பு படை வீரர் முத்துகிருஷ்ணன் உள்பட 29 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே ரேடாரில் இருந்து மறைந்தது. மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

  அந்த விமானத்தை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வந்தது. இருப்பினும் 55 நாட்களாக நடந்த தேடல் பணியில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

  இந்த நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேரும் உயிரிழந்ததாக கருதப்பட வேண்டும் என்ற முடிவுக்கு இந்திய விமானப்படை வந்துள்ளது. இது தொடர்பாக 29 பேரின் குடும்பத்துக்கும் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

  எங்களிடம் உள்ள பொருத்தமான அனைத்து விமானங்களையும் பயன்படுத்தி, காணாமல் போன விமானத்தை தேடும் 201 தேடல், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விமானங்களை கொண்டு ஏறத்தாழ 2 லட்சத்து 17 ஆயிரத்து 800 சதுர கடல் மைல் பரப்பளவில் பல முறை தேடல் நடவடிக்கை நடந்துள்ளது.

  சர்வதேச நெருக்கடி கால அதிரடி குழுக்கள், அமெரிக்க செயற்கைக்கோள்கள் மூலமும், மாயமான விமானம் குறித்து எந்த உறுதியான தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

  ஆனாலும் காணாமல் போன ஏ.என்.32 விமானத்தை தேடும் பணி இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.

  தற்போது சூழ்நிலை ஆதாரங்கள், விரிவான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ஆகியவற்றை விசாரணை நீதிமன்றம் மிகவும் கவனமாக ஆராய்ந்தது. இந்த நிலையில், காணாமல் போன துரதிர்ஷ்டமான விமானத்தில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருப்பதற்கு சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இந்த கடிதத்துடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள் இறந்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றிதழும் இணைக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறும்போது, “விமானத்தை தேடும் பணி நிறுத்தப்படவில்லை. ஒழுங்கு மற்றும் விதிமுறைகளின்படி விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, விமான தேடுதல் நடவடிக்கையுடன் சேர்த்து குழப்பம் அடைய தேவை இல்லை” என குறிப்பிட்டனர்.
  Next Story
  ×