என் மலர்
செய்திகள்

போராட்டங்களில் சேதமடையும் சொத்துக்களுக்கு இழப்பீடு: புதிய சட்டம் கொண்டு வருகிறது மேற்கு வங்காளம்
போராட்டங்களில் சேதமடையும் பொருட்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய சட்டத்தினை மாநிலத்தில் அமல்படுத்திட மேற்கு வங்காள அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
கொல்கத்தா :
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்துவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை போராட்டத்தில் ஈடுபடுகிறது. சுமார் 22 கோடி பேர்கள் பங்கேற்கும் இந்த போராட்டம், மேற்கு வங்களாத்திலும் நடைபெற இருக்கிறது.
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களையும் முழு முனைப்புடன் அமலாக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே, பாதுகாப்பு போன்ற முக்கியமான பொதுத்துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் இந்த பொது வேலை நிறுத்தத்துக்கு அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய தொழிற்சங்கங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில் போராட்டங்களில் சேதமடையும் பொருட்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய சட்டத்தினை மாநிலத்தில் அமல்படுத்திட மேற்கு வங்காள அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘போராட்டங்களினால் சேதமடையும் பொருட்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய சட்டத்தினை அமல்படுத்திட மேற்கு வங்காள அரசு திட்டமிட்டு வருகிறது. நாளை மேற்கு வங்காளத்தில் நடைபெறும் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது. போராட்டம் நடத்துவதால் நடத்துபவர்களுக்கு விளம்பரம் கிடைக்குமே தவிர அதனால் ஒரு பயனும் இல்லை’’ என்றார்.
மேலும், ‘‘நாளை நடைபெற இருக்கும் போராட்டத்தின்போது வாகனம் மற்றும் கடைகள் சேதமடைந்தால், அதற்கு இழப்பீடு வழங்கப்படும்’’ என்றார்.
மம்தா பானர்ஜி நாளை அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story