என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சுழி அருகே கடைக்குள் புகுந்து டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ5.37 லட்சம் கொள்ளை
  X

  திருச்சுழி அருகே கடைக்குள் புகுந்து டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ5.37 லட்சம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளிமடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த இரு நாட்களாக மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது.
  • மர்ம நபர்கள் தாக்குதலில் பூமிநாதன், நாராயணசாமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

  அருப்புக்கோட்டை:

  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது பள்ளிமடம் கிராமம். இந்த கிராமத்திற்கு வெளியே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

  இந்த கடையில் பள்ளி மடத்தை சேர்ந்த பூமிநாதன் (வயது 49), பச்சேரியை சேர்ந்த முத்துகருப்பன் (45), நார்த்தம்பட்டியை சேர்ந்த நாராயணசாமி (48), பனையூரை சேர்ந்த பெருமாள்சாமி ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

  அதே கடையில் புளியங்குளத்தை சேர்ந்த செந்தில், பச்சேரியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரும் பணிபுரிகின்றனர். திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திரு விழாக்கள் நடந்து வருகின்றன. இதனால் பள்ளிமடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த இரு நாட்களாக மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது.

  நேற்றும் ஏராளமான மதுபிரியர்கள் வந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். இரவில் பணி முடிந்ததும் கடை ஊழியர்கள் சென்று விட்ட நிலையில், விற்பனையாளர்கள் வசூல் பணத்தை எண்ணி வைத்து விட்டு கடையை பூட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர்.

  முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள், கடையில் உள்ள வசூல் பணத்தை தந்து விடுமாறு மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள், தங்களிடமிருந்த வாளால் விற்பனையாளர் பூமிநாதனை வெட்டினர்.

  இதனால் சுதாரித்துக் கொண்ட மற்ற விற்பனையாளர்கள் கடையை மூட முயன்றனர். அப்போது அவர்களை மர்ம நபர்கள் பீர்பாட்டிலால் தாக்கி டாஸ்மாக் கடையில் இருந்த 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

  மர்ம நபர்கள் தாக்குதலில் பூமிநாதன், நாராயணசாமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

  காயம் அடைந்த பூமிநாதன் உள்ளிட்ட 3 பேரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

  மேலும் விசாரணையை துரிதப்படுத்த உத்தர விட்டார். இதையடுத்து டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

  கொள்ளை நடந்த டாஸ்மாக் மதுக்கடையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளன. அதில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை.

  இருந்தபோதிலும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடையில் புகுந்து விற்பனையாளர்களை தாக்கி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதே திருச்சுழி தாலுகாவில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் காவலாளியை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×