search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை: அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது
    X

    டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை: அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது

    • தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது.
    • பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் அறுவடை எந்திரங்களை வயல்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்வதும் தொடர்கிறது.

    தஞ்சையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை 6 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் சாரலாக பெய்தது. நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறி கொட்டியது. தொடர்ந்து 1 மணி நேரம் மழை பெய்தது.

    பின்னர் சிறிதுநேரம் மழை வெறித்தது. இதையடுத்து மீண்டும் 9 மணியளவில் மிதமான அளவில் மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேப்போல் வல்லம், திருக்காட்டுபள்ளி, குருங்குளம், பூதலூர், பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், மாப்படுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கனமழை பெய்தது. மாப்படுகை கிராமத்தில் 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மூழ்கி முளைக்க தொடங்கி விட்டன.

    ஒட்டுமொத்தத்தில் மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேப்போல் திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் நள்ளிரவில் கனமழை பெய்தது.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது. பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் அறுவடை எந்திரங்களை வயல்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே உடனடியாக பயிர் சேதங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை அனைத்து பகுதிகளிலும் திறந்து ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×