என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழையால் சாலையில் பள்ளம்: பூந்தமல்லி-திருமழிசை கூட்டுச்சாலை வரை 3 கி.மீட்டர் தூரத்துக்கு கடும் வாகன நெரிசல்
- சாலை எப்போதும் வாகன போக்கு வரத்தால் பரபரப்பாக காணப்படும். இந்த
- குண்டும் குழியுமாக சாலை மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஏராளமான பொறியியல் கல்லூரி, பள்ளிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இதனால் இந்த சாலை எப்போதும் வாகன போக்கு வரத்தால் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பூந்தமல்லி முதல் திருமழிசை கூட்டுசாலை வரை பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்தன.
குண்டும் குழியுமாக சாலை மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இன்று காலை ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பூந்தமல்லி முதல் திருமழிசை கூட்டு சாலை வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இன்று காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. பின்னர் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை கூட்டு சாலையை கடக்க ஒரு மணி நேரம் வரை ஆனதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இப்பகுதியில் சேதம் அடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் மற்றும் போதிய போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை சரி செய்து வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் பூந்தமல்லி-ஆவடிசாலையில் கரையான் சாவடியில் இருந்து சென்னீர்குப்பம் வரை குண்டும் குழியுமான சாலையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.