என் மலர்
உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அனுமதியின்றி மேடை-பேனர்: நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு
- விமான நிலையத்திற்கு வெளியே பேனர்களும் கட்டப்பட்டிருந்தன.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் நிலையூர் முருகன், பாண்டுரங்கன், முத்துவேல் உட்பட 5 பேர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
எடப்பாடி பழனிசாமி வரவேற்க விமான நிலையத்தில் அனுமதியின்றி மேடை மற்றும் பேனர் கட்டிய அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரை வரவேற்பதற்காக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறிய மேடை விமான நிலைய முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.மேலும் விமான நிலையத்திற்கு வெளியே பேனர்களும் கட்டப்பட்டிருந்தன.
மதுரை விமான நிலையத்தில் எவ்வித அனுமதியுமின்றி மேடை, பேனர் அமைத்ததற்காகவும் மேளதாளங்களுடன் அதிகளவில் கூட்டம் கூட்டி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விமான நிலைய அதிகாரிகள் பெருங்குடி போலீசில் புகார் செய்தனர்.
இந்த புகாரின் பேரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நிலையூர் முருகன், பாண்டுரங்கன், முத்துவேல் உட்பட 5 பேர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






