search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிக்குள் புகுந்து பயங்கர வன்முறை- கல்வீச்சில் டி.ஐ.ஜி உள்பட 20  போலீசார் காயம்
    X

    போலீஸ் வாகனம் தீப்பற்றி எரியும் காட்சி


    பள்ளிக்குள் புகுந்து பயங்கர வன்முறை- கல்வீச்சில் டி.ஐ.ஜி உள்பட 20 போலீசார் காயம்

    • மறியல் நடந்த சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • திடீரென்று பள்ளிக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்தனர்.

    சின்னசேலம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தைசேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17).

    இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 13-ந் தேதி அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்துகுதித்து தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மாணவியின் உடலை வாங்கவும் மறுத்து விட்டனர்.


    நேற்று மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல கூறினார்கள். அதனை அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மாணவி படித்த சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி முன்பு இன்று காலை மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

    அவர்கள் மாணவி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினார்கள். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல் நடந்த சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீசார் அங்கு விரைந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


    திடீரென்று பள்ளிக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசார் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சரமாரியாக கற்களை வீசினார்கள். உடனே போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.

    ஆனால் போலீசார் குறைவாக இருந்ததால் நூற்றுக்கணக்கில் திரண்டு இருந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து கற்களை வீசிய படி போலீசாரை தாக்கினார்கள். இந்த கல் வீச்சில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதனால் போலீசார் பள்ளிக்குள் சென்றனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனை கவிழ்க்க முயற்சித்தனர். அதன் பின் பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள்.

    பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். மேலும் போலீஸ் தடுப்புகளுக்கும் தீ வைத்தனர்.

    பள்ளிக்குள் சென்று சூறையாடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்த பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தனர். டிராக்டரை கொண்டு பஸ்களை இடித்து சேதப்படுத்தினர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பஸ்சை இயக்கி மற்ற பஸ்கள் மீது மோதவைத்து கவிழ்த்தனர்.

    பின்னர் பள்ளி பஸ்களுக்கு தீ வைத்தனர். பஸ்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் பள்ளிக்குள் இருந்து கரும் புகை வெளியேறியது. அதே போல் சாலையில் இருந்த போலீஸ் வாகனத்திற்கும் தீ வைத்தனர். இதனால் அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது.


    நேரம் செல்ல செல்ல வன்முறை தீவிரம் அடைந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    வன்முறையை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஆனாலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் வெளியே விரட்டி அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை.

    போலீசாரை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    போராட்டக்காரர்கள் தொடர்ந்து பள்ளி முன்பும் உள்ளேயும் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.

    Next Story
    ×