search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையத்தில் சித்திரை வெண்கொடை திருவிழாவில் மோதல்- கல்வீச்சில் 2 போலீஸ்காரர்கள் காயம்
    X

    ராஜபாளையத்தில் சித்திரை வெண்கொடை திருவிழாவில் மோதல்- கல்வீச்சில் 2 போலீஸ்காரர்கள் காயம்

    • ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினரால் நடந்த மோதல் சம்பவத்தால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    • முதல் கட்டமாக அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு சமூகத்தினர் சித்திரை வெண்கொடை திருவிழாவை விமரிசையாக நடத்துவார்கள்.

    இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கானோர் ஆடி-பாடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். அதன்படி தமிழ் புத்தாண்டான நேற்று ராஜபாளையத்தில் சித்திரை வெண்கொடை திருவிழா நடந்தது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    நேற்று காலை ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் வெண்கொடையுடன் ஆடி வந்தனர். மேலும் ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த ஊர்வலம் மதியம் அய்யனார் கோவிலை சென்றடைந்தது.

    பின்னர் மாலையில் மீண்டும் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் கோஷமிட்டுக் கொண்டு ஆடி வந்தனர். சம்பந்தபுரம் பகுதியில் வந்தபோது அதே சமூகத்தில் 2 பிரிவினருக்கு இடையே ஆடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அவதூறான வார்த்தைகளால் பேசினர்.

    சிறிது நேரத்தில் இது மோதலாக வெடித்தது. இருதரப்பை சேர்ந்தவர்களும் ரோட்டில் கிடந்த கற்கள், கம்பை எடுத்து சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

    நிலைமை எல்லை மீறி போவதை உணர்ந்த போலீசார் உடனே தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஊர்வலம் வந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.இந்த மோதலில் கல்வீசி தாக்கியதில் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் காயமடைந்தனர்.

    விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்காரர்களான மதுரை மாவட்டம் நொச்சிக்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன் (வயது32), விருதுநகர் மாவட்டம் சத்தியரெட்டியபட்டியை சேர்ந்த ராஜா (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினரால் நடந்த மோதல் சம்பவத்தால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே நேற்று நடந்த மோதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல் கட்டமாக அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×