என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடங்கி ஒரு ஆண்டு ஆகியும் முடியவில்லை... புதைகுழிபோல் மாறிப்போன முகலிவாக்கம் சாலை
    X

    தொடங்கி ஒரு ஆண்டு ஆகியும் முடியவில்லை... புதைகுழிபோல் மாறிப்போன முகலிவாக்கம் சாலை

    • மாநகராட்சியிடம் கேட்டால் மெட்ரோ வாட்டர் பணி முடிந்து 230 மீட்டர் பகுதியில் தான் ரோடு போடுவதற்கு ஒப்படைத்தார்கள்.
    • வேலைகள் முடியாமல் இருப்பதற்கு ஆள் பற்றாக்குறையும் ஒரு காரணம் என்கிறார்கள்.

    சே... இப்படி இரண்டும் கெட்டான் இடத்தில் வந்து மாட்டிக்கிட்டோமே!

    அந்த பக்கம் குன்றத்தூருக்கும் போக முடியவில்லை, இந்த பக்கம் பூந்தமல்லிக்கும் போக முடியவில்லை. எப்படி தான் இங்கிருந்து நகர்வதோ என்று புலம்பிக்கொண்டு இருந்த நாரதரிடம் அந்த வழியாக சென்ற வழிப்போக்கர் சொன்னார். சாமி இந்த ரோடு முழுவதும் இப்படி தான் இருக்கும். தட்டுத்தடுமாறி சமாளித்து தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை என்றார். ஏன் தம்பி. இவ்வளவு மோசமாக இந்த ரோடு கிடக்கிறது என்றதும் சொன்னார். இது இன்று, நேற்றல்ல சாமி கிட்டதட்ட 2 வருடமாக இப்படி தான் கிடக்கிறது. 2 வருடத்திற்கு முன்பு பாதாள சாக்கடை போடுவதற்காகவும், மெட்ரோ வாட்டர் இணைப்பிற்காகவும் முகலிவாக்கம் ரோட்டில் இரண்டு புறமும் நோண்ட ஆரம்பித்தார்கள். நாங்களும் வேகமாக பணிகள் முடிந்து விடும். நகரம் வளரும்போது இந்த உள்கட்டமைப்பு வசதிகளும் அவசியம் தானே என்று தற்காலிக சிரமத்தை பொறுத்து வந்தோம்.

    ஆனால் இதுவரை எந்த வேலையும் முழுமையாக முடியவில்லை. இந்த பகுதியை பொறுத்தவரை அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள், பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவர்கள் என்று நெரிசல் அதிகமாக இருக்கும். இப்போது ரோட்டின் இரண்டு புறமும் அதல பாதாள குழிகள் போல் தோண்டப்பட்டும். குண்டும், குழியுமாகவும் சாலை கிடப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் தடுமாறிதான் இந்த சாலையை கடந்து செல்கிறார்கள். அதிலும் அவ்வப்போது கீழே விழுந்து கை, கால்களில் கீறல்களோடு வீடு திரும்புவோர்களும் உண்டு.

    இந்த பகுதி வழியாக இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறாமல் சென்று விட்டால் அவர்கள் உண்மையிலேயே வாகனம் ஓட்டுவதில் திறமைசாலிகள் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வாரியம் ஆகிய 3 துறைகளையும் சேர்ந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துகிறார்கள். முகலிவாக்கத்தில் மொத்தம் 2300 மீட்டர் தூர நெடுஞ்சாலை மற்றும் உட்புற சாலைகள் ஆகிய இடங்களில் மெட்ரோ வாட்டர் பணிகள் நடைபெறுகிறது.

    மாநகராட்சியிடம் கேட்டால் மெட்ரோ வாட்டர் பணி முடிந்து 230 மீட்டர் பகுதியில் தான் ரோடு போடுவதற்கு ஒப்படைத்தார்கள். அதை நாங்கள் போட்டு முடித்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் நேரில் பார்க்கும்போது எங்குமே பணிகள் முழுமையடையவில்லை. இப்படி தான் மணப்பாக்கம் ரோட்டில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மெட்ரோ வாட்டர் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் இனி சாலை போட்டுக்கொள்ளுங்கள் என்று மாநகராட்சியிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். அவர்களும் சாலையை போட்டு முடித்தார்கள். இப்போது மீண்டும் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக ரோடுகளை தோண்ட வேண்டிய கட்டாயம்.

    மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் கேட்டால். நாங்கள் வேகமாகத்தான் பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு எல்லா பணிகளையும் நிறைவு செய்து விடுவோம் என்கிறார்கள்.

    இன்னொரு முக்கிய காரணம் இந்த வேலைகள் முடியாமல் இருப்பதற்கு ஆள் பற்றாக்குறையும் ஒரு காரணம் என்கிறார்கள். நாம் எந்த காலத்தில் வாழ்கிறோம்? கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருக்கும் நிலாவில் மேடு பள்ளங்கள் எங்கெல்லாம் இருக்கிறது என்பதை துல்லியமாக கணித்து சரியான இடத்தில் எத்தனை மணி, எத்தனை நிமிடம், எத்தனை நொடிக்கு சந்திரயானை இறக்க வேண்டும் என்று திட்டமிட்டு இறக்கி சாதித்து இருக்கும் காலம். ஆனால் கண்ணுக்கு தெரிந்த சில கிலோமீட்டர் சாலையில் நிறைவேற்ற வேண்டிய சாதாரண பணிகளை ஆண்டு கணக்கில் இழுத்தடிப்பதும் அதற்கு ஆளுக்கொரு காரணம் சொல்வதும் தான் வேடிக்கையாக இருக்கிறது. ஆட்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். மெட்ரோ வாட்டர் பணியை முடித்தால் நாங்கள் முடித்து விடுவோம் என்பதும் உண்மை தான்.

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தாலும் பிரச்சினை தீரவில்லையே. இதை விரைவாக தீர்ப்பதற்கு என்ன வழி. ஒரு குறிப்பிட்ட தூரத்தை தேர்வு செய்யுங்கள். அனைத்து துறைகளும் ஒன்றிணையுங்கள். ஒரே நேரத்தில் அத்தனை துறைகள் சார்ந்த பணியையும் செய்து முடியுங்கள். அதன் பிறகு தொடர்ந்து மேலும் கொஞ்ச தூரத்தை எடுத்து இதேபோல் பணியை நிறைவு செய்யுங்கள். இப்படி திட்டமிட்டு செய்தால் ஆண்டுக்க ணக்கில் தாமதமாகாது. சில நாட்கணக்கில் அல்லது ஓரிரு மாதங்களில் பணிகளை செய்து விட முடியும்.

    துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு மற்றும் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தான் இத்தனை குழப்பங்களும், பிரச்சினைகளும் நீடிக்கின்றன என்ற வழிப்போக்கரின் யதார்த்தமான வாதத்தை குடிநீர்வாரிய அதிகாரியிடம் நாரதர் கூறி இருக்கிறார்.

    அதை கேட்டதும் அந்த அதிகாரி 'அட... போங்க சாமி. நீங்க சொல்வது கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் நடைமுறை சிக்கல் வேறு விதமாக இருக்கிறதே! அதைபோய் நாங்கள் யாரிடம் முறையிடுவது?

    ரோட்டை தோண்டி குழாய் பதிக்கும்போது மேனுவல் திறப்பு எங்கள் வீட்டுக்கு முன்பு போடக்கூடாது என்கிறார்கள். குறிப்பிட்ட தூர இடைவெளியில் தானே போட முடியும்?

    முற்றிலும் பாறைகள் நிறைந்த பகுதி வெடி வைத்து தகர்த்தால் வீடு அதிரும் என்கிறார்கள். அதனால் ஓரிரு இன்ஞ்ச் பாறையை உடைப்பதற்கே ஒரு நாள் ஆகிவிடுகிறது. எங்கள் வீட்டு வழியாக பக்கத்து வீட்டுக்கு இணைப்பு செல்லக்கூடாது என்கிறார்கள். 6 அடி ஆழம் தோண்டிதான் அலைன்மென்ட பார்த்து குழாய் பதிக்க முடியும். தோண்டுவதற்குள்ளேயே இவ்வளவு அக்கப்போர். இதற்காக

    பலர் வழக்கும் போட்டார்கள். அதையெல்லாம் உடைத்து தான் பாறையையும், உடைக்கிறோம் குழாயையும் பதிக்கிறோம். போக்குவரத்தை மாற்ற சொன்னால் காலையிலும், மாலையிலும் நெரிசல் அதிகமாகி விடும் என்கிறார்கள்.

    இரவிலும் வேலை செய்யலாம் என்றால் தூக்கம் கெட்டுப்போகும் என்று குடியிருப்புவாசிகள் கொடி பிடிக்கிறார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தையாவது சீர்செய்யுங்கள் என்றால் அதையும் செய்யவில்லை. நீங்களே சொல்லுங்கள்?

    சரி. பேசுகிறேன் என்றதும் அய்யய்யோ சாமி என் பெயரை சொல்லிவிடாதீர்கள் என்று அதிகாரி நழுவியதும் சிரித்துக்கொண்டே புறப்பட்டார் நாரதர்.

    Next Story
    ×