என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரி தண்ணீரில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை மீன்கள் மற்றும் பறவைகள் உண்ணும்போது ஆபத்தை விளைவிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர்.
- டைட்டானியம் போன்ற கன உலோகங்கள் அலர்ஜியை அதிகரிக்கும்.
பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலம் 80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இங்கு 176 வகையிலான பறவை இனங்கள், 50 வகை மீன்கள், நத்தை இனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 'ராம்சர்' தளங்களாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகிறது. மேலும் அப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் தண்ணீரும் மாசு அடைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் நடத்திய ஆய்வில் பள்ளிக்கரணை சதுப்பு நில தண்ணீரில் ஆபத்தை ஏற்படுத்தும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யின் சிவில் என்ஜினீயரிங் துறையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள பொறியியல் பிரிவின் பேராசிரியர் இந்து மதிநம்பி மற்றும் ஆராய்ச்சி யாளர் ஏஞ்சல் ஜெசிலீனா ஆகியோர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆய்வு செய்தனர்.
இதில் தண்ணீரில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேற்பரப்பு நீரில் ஒவ்வொரு மீட்டர் கனசதுர அளவில் சராசரியாக 1,758 மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இதில் 50 சதவீதத்துக்கும் கீழ் 1 மி.மீட்டர் தடிமனுக்கும் குறைவானவை. மேலும் துத்தநாகம், இரும்பு, நிக்சல் மற்றும் டைட்டானியம் போன்ற கன உலோகங்களும் கண்டறியப்பட்டு உள்ளது.
மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை மீன்கள் மற்றும் பறவைகள் உண்ணும்போது ஆபத்தை விளைவிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் மிகவும் ஆபத்தானது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கில் இருந்து மாற வேண்டிய தேவை உருவாகி உள்ளது. தண்ணீரில் உள்ள துத்தநாகத்தால் இரைப்பை, குடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
டைட்டானியம் போன்ற கன உலோகங்கள் அலர்ஜியை அதிகரிக்கும். எனவே நீர் நிலைகளை கண்காணிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.