search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னபூரணி அம்மாளின் டிஜிட்டல் ஆன்மீக தீட்சை- திருவண்ணாமலையில் புதிய ஆசிரமம் அமைப்பு
    X

    அன்னபூரணி

    அன்னபூரணி அம்மாளின் 'டிஜிட்டல்' ஆன்மீக தீட்சை- திருவண்ணாமலையில் புதிய ஆசிரமம் அமைப்பு

    • என்னுடைய ஆன்மீகத்தில் உணவு, உடைக்கு கட்டுப்பாடு கிடையாது.
    • ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே பிறவி எடுத்துள்ளேன்.

    சென்னை:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னபூரணி அம்மாள் என்ற பெண் சாமியார் பரபரப்பாக பேசப்பட்டார்.

    ஆன்மீக சொற்பொழிவு மூலமாக சர்ச்சையில் சிக்கிய அன்னபூரணி அம்மாளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

    இந்த நிலையில் அன்னபூரணி அம்மாள் திருவண்ணாமலையில் புதிய ஆசிரமம் அமைத்து அவரை தேடி செல்லும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தை உணர வைத்து வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே ராஜாதோப்பு நெடுஞ்சாலையை தாண்டி ஊரை கடந்து சென்றால் தாமரைக்குளத்தின் எதிரே தென்னை ஓலைகளால் ஆசிரம குடில் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த குடிலில் உள்ள ஆஸ்தான இருக்கையில் இருந்தபடி அவர் ஆன்மீகம் போதிக்கிறார். தற்போது அன்னபூரணி அம்மாள் 'டிஜிட்டல்' முறையிலும் ஆன்மீக தீட்சை அளிக்கிறார். இதற்காக ஒரு போன் அழைப்புக்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறார்.

    ஆன்லைனில் அவரது வங்கி கணக்குக்கு முன் கூட்டியே கட்டணம் செலுத்தினால் அவரிடம் மனம் விட்டு பேசி ஆன்மீக தீட்சை பெறலாம்.

    ஆன்மீகம் தொடர்பாக அன்னபூரணி அம்மாள் கூறியதாவது:-

    நான் சக்தியின் வெளிப்பாடு. எல்லோருக்கும் இறைதன்மையை உணர வைப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். என்னை தேடி வருகிறவர்களின் நோய்களை சரி செய்கிறேன். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய தன்மையை அவர்களுக்கு கொடுக்கிறேன். என்னுடைய கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அது பற்றி நான் சொன்னால் தவறாக சித்தரிக்கிறார்கள்.

    என்னுடைய ஆன்மீகத்தில் உணவு, உடைக்கு கட்டுப்பாடு கிடையாது. காவி உடை கட்டிக்கொண் டால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியாது. ஆசிரமம் இருக்கும் இடம் எனக்கு இறைவனால் உணர்த்தப்பட்டது. நான் யாரையும் ஏமாற்றவில்லை. எந்த ஒளிவுமறைவும் என்னிடம் கிடையாது. என்னை பிடிக்காதவர்கள் தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். என் மீதான தவறான பார்வைகளை உடைத்தெறிவேன்.

    இது ஒரு ஆணாதிக்க சமூகம். ஆன்மீகத்தில் ஒரு பெண் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். என்னை பிடிக்காதவர்கள் ஒதுங்கி போய் விடுங்கள். என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவள். எல்லோருமே எனக்கு குழந்தைகள்தான். எனக்குள் இறை சக்தி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே பிறவி எடுத்துள்ளேன்.

    என்னுடைய தீட்சையை நம்புகிறவர்களுக்கு போன் மூலம் எல்லாம் பலிக்கிறது. போனில் தீட்சை கொடுக்கும்போது என்னிடம் இருக்கும் சக்தி பக்தர்களுக்கு செல்கிறது. என்னை உணருபவர்களுக்கு இந்த உண்மைகள் தெரியும். நான் இந்த ஆசிரமத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறேன். நாளை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதில்லை. அது தானாகவே நடக்கும்.

    எனது கணவர் அரசுவும் நானும் ஒன்றாக இணைந்த பிறகுதான் எனக்குள் இறை சக்தி வெளிப்பட்டது. அவரது உடலுக்குதான் மறைவு. உயிருக்கு மறைவு இல்லை. அரசு இப்போதும் எனது உடலில்தான் கலந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×