search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மின்துறையை தனியார் மயமாக்க ரங்கசாமி ஒப்புதல்-நாராயணசாமி தகவல்

    புதுவை மின்துறையை தனியார் மயமாக்க ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கா? கவர்னருக்கா? என்பதை மட்டும் விசாரித்த கோர்ட்டு, மாநில அரசின் காலதாமதம் காரணமாக ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறி-வாளனை விடுவித்துள்ளது. 

    மத்திய அரசு முடிவெடுக்காத நிலையே பல கட்டங்களில் இத்தீர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 8 பேரும் குற்றவாளிகள்தான். அவர்களை ராஜீவ் குடும்பமோ, மற்றவர்களோ மன்னித்தாலும், காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 

    கொலை குற்றவாளியை விடுவித்ததை கொண்டாடும் வகையில் சில அமைப்புகள் பட்டாசு வெடிப்பதும், இனிப்பு வழங்குவதும் அவர்களின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது. இது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. ராஜீவ்காந்தியோடு குண்டு வெடிப்பில் உயிரிழந்த குடும்பத்தினர் நிலையையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.

    மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டுகால சாதனைகளை கூட்டம் நடத்தி, தெரிவிக்கப் போவதாக மாநில பா.ஜனதா கூறியுள்ளது. மோடி அரசில் 8 ஆண்டுகளில் சாதனைகள் ஏதும் கிடையாது. மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. 

    விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், தொழில்கள் நசிவு போன்றவைதான் ஆட்சியின் சாதனைகள். இதை மக்களிடம் சொன்னால் அவர்கள் விரட்டியடிப்பார்கள்.

    அமித்ஷா புதுவை வந்தபோது புதிய திட்டத்துக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர் வந்து சென்ற பின்னால் கடந்த 9-ந் தேதி புதுவை மின்துறையை தனியார்மயமாக்க ஒப்புதல் அளித்து ரங்கசாமி, மத்திய அரசுக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளார். 

    மின்துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு சொத்து உள்ளது. மின்துறையால் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. தனியார்மயமானால் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.8-க்கு பெற வேண்டியிருக்கும். அங்கு பணியாற்றும் 3 ஆயிரத்து 500 ஊழியர்களின் நிலை என்ன? பணி பாதுகாப்பு உண்டா? அவர்கள் அரசு ஊழியர்களாக தொடர்வார்களா? மின்துறை தனியார் மயமாக்கும் முடிவை அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தார்களா? 

    அடுத்தகட்டமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் புதுவை அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. காந்தி சிலை முதல் பாகூர் வரையிலும், காரைக்காலில் டி.ஆர்.பட்டினம், திருநள்ளாறு பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளனர். இதன் மூலம் புதுவை சுடுகாடாகும். கேசினோ நடத்த அனுமதி வழங்கவும் முடிவு செய்துள்ளனர். 

    புதுவை மாநிலத்தை மத்திய பா.ஜனதா தன் கையில் எடுத்துக்கொண்டு டம்மி முதல்-அமைச்சரை வைத்து ஆட்டி படைக்கின்றனர். இதனால் புதுவையின் தனித்தன்மை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த அரசு பா.ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.   புதுவை என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசின் ஊழல் பட்டிலை தயாரித்து வருகிறோம். விரைவில் இதை வெளியிடுவோம். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் உடனிருந்தார்.
    Next Story
    ×