என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சொத்துக்காக முதியவரை கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார்

    அரியலூர் அருகே இயற்கை மரணம் அடைந்தவரை சொத்துக்காக கொலை செய்து விட்டதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
    அரியலூர்: 

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பா (வயது 92). இவருக்கு ஜெகதாம்பாள், லட்சுமி, வசந்தா என்ற 3 மனைவிகள் உள்ளனர்.  

    இதில் முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், 2-வது மனைவி லட்சுமிக்கு சிவமாலை முத்தமிழ், வேம்பு கண்ணன், புஷ்பவள்ளி முருகேசன்ஆகிய 3 மகள்கள் உள்ளனர். 

    இவர்கள் அனைவரும் உள்ளூரில் கட்சி பிரமுகர்களை திருமணம் செய்து    கணவர்களுடன் வசித்து வருகின்றனர்.

    சின்னப்பா வயதான காலத்தில் தனது மூன்றாவது மனைவியின் மகளான    அழகுமதியுடன் வாளரக்குறிச்சி கிராமத்தில் வசித்து வந்தார். வயதான காலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு ஆதரவாக இருந்த அழகுமதிக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்ததாக தெரிகிறது. 

    இந்தநிலையில் இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதனை அறிந்த இரண்டாவது மனைவியின் மகள்கள் மற்றும் மருமகன் கள் சொத்துக்காக சின்னப்பாவை கொலை செய்துவிட்டதாக இரும்புலிக்குறிச்சி போலீசாரிடம் புகார் செய்தனர். 

    அதனைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் அழகுமதி மற்றும் அவரது கணவர் குமாரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்தநிலையில் போலீசார் பாதுகாப்புடன் முதியவர் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×