என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சவ ஊர்வலத்தில் மோதல்
வாலாஜா அருகே முன்விரோதம் காரணமாக சவ ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த குடிமல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (70) உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
உறவினர்கள் அவரது சடலத்தை நேற்று அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் வழியாக பாலாறு அணைகட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே முன்விரோதம் இருந்த காரணத்தால் இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் அவ்வழியாக சடலத்தை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதில் குடிமல்லூர் பகுதியைச் சேர்ந்த முரளி (29) படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சவ ஊர்வலத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி குடிமல்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சம்பவம் குறித்து குடிமல்லூரை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த விக்னேஷ் (22) நவநீதன் (25) சுந்தரபாண்டியன் (22) நிஷாந்தன் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






