search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    படியூர் கோவிலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி - பாதுகாக்கும் பக்தர்கள்

    இக்கோவிலில் ஸ்ரீசக்கரத்துடன் கூடிய மகாமேரு வளாகம், வாகனம் இல்லாத பைரவர் சன்னதி உள்ளது கூடுதல் சிறப்பு.
    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா படியூர் - சின்னாரிபட்டியில் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை மாதேசிலிங்கம் கோவில் உள்ளது. கோவில் 103 டிகிரி தென் கிழக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 4 முதல் 25-ந்தேதி வரை 22 நாட்கள், அக்டோபர் 16-ந்தேதி முதல், நவம்பவர் 8-ந்தேதி வரையிலான, 22 நாட்கள் என 44 நாட்கள் மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது.

    இது தவிர ஆண்டுக்கு 80 நாட்கள் நிலவொளி படும் வகையில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீசக்கரத்துடன் கூடிய மகாமேரு வளாகம், வாகனம் இல்லாத பைரவர் சன்னதி உள்ளது கூடுதல் சிறப்பு. வெள்ளை கல்லால் உருவான நந்தியின் இடது காலில் பாரம்பரிய தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

    கோவிலின் சிறப்பு குறித்து திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன் கூறியதாவது:

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கொங்கண சித்தரால் ஸ்ரீமாதேசிலிங்கம் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் நூற்றாண்டில் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் 300 ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவரால் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடையிலும் வற்றாத மகாவிஷ்ணு சுனை நீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. சுனையின் வடக்கே, பழஞ்சாமி மாடம் என்று அழைக்கப்படும் இடத்தில் கொங்கண சித்தர் ஸ்தாபித்த சிலைகள் இன்றும் உள்ளன.

    சிவலிங்கம், நந்தி சிலைகளுடன் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘ஜேஷ்டாதேவி’ எனப்படும் மூதேவி சிலை கையில் துடைப்பத்துடன் காணப்படுகிறது. இருபுறமும் மாந்தி, குளிகன் சிலைகளும் உள்ளன. சிலைகளின் பின் மகேந்திர பல்லவனின் தளபதி பற்றிய செய்திகள் வட்டெழுத்து வடிவில் காணப்படுகிறது. 

    அதே பகுதியில் 2,000-ம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி ஒன்று இன்றளவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கோவிலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாக்கவும் வரலாற்றை ஆவணப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×