search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனத்தை கலெக்டர் ஸ்ரீதர் இயக்கி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனத்தை கலெக்டர் ஸ்ரீதர் இயக்கி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனத்தை இயக்கி ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர்

    கள்ளக்குறிச்சியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா என கலெக்டர் இயக்கி ஆய்வு செய்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா, அதில் முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளிட்டவை உள்ளதா என ஆய்வு செய்வதற்காக அனைத்து வாகனங்களையும் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி வளாகத்திற்கு கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வரவழைத்தனர். 

    இதையடுத்து அந்த வாகனங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகனங்களில் அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, பேருந்தின் தரைத்தளம், புவியிடங்காட்டி, கண்காணிப்பு கேமரா, பிரேக், லைட், கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை சரியான முறையில் இருக்கிறதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளி வாகனம் ஒன்றை அவரே இயக்கி சரிபார்த்தார்.

    இதில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 76 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு அவசர காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏற்படுத்தினர்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×