என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம்: தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா மனு தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெள்ளப் பெருக்கின்போது காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்கும் திருப்பிவிட ஏதுவாக நீண்ட நாள் கனவுத் திட்டமான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டு, 14,400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 14-02-2021 அன்று நடைபெற்றது.
திருப்பதியில் 29வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அப்போது, காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார். மேலும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் பிற மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவது குறித்து தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இதுபோன்ற மாநில நலன்களை பாதிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Next Story






