search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    பழனி கோவிலில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் திடீர் போராட்டம்

    பழனி கோவிலில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த உத்தரவின்படி பக்தர்களுக்கு இலவசமாக மொட்டையடிக்கப்படுகிறது.

    கடந்த 3 மாதமாக ஒருமுறை கூட ஊக்கத்தொகை வழங்கவில்லை என கூறி இன்று மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் 330 பேரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் எங்களுக்கு மொட்டையடிக்கும் பக்தர்களிடம் கோவில் நிர்வாகம் வசூலிக்கும் கட்டணத்திலிருந்து பங்குத் தொகை வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கோவில்களில் கட்டணமில்லாமல் மொட்டை அடிக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, மாதம்தோறும் 5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், அத்துடன் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் ஊதியம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த தங்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்த்த நிலையில் 3 மாதங்களாகியும் ஒருமுறை கூட ஊக்கத்தொகை வழங்கவில்லை.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், அரசு உத்தரவு வரவில்லை என்று பதிலளிக்கின்றனர். இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்த தீபாவளி போனஸ்சும் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்கள் குழந்தைகளுக்கு தீபாவளிக்கு புத்தாடை கூட எடுக்க முடியாத அளவு வறுமையில் உள்ளதாக கவலை தெரிவித்தனர்.

    எனவே 330 மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது கண்டனத்தையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர். இதில் 30ரூபாய் கட்டணத்தை 70 ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும், மாதம்தோறும் ஊக்கத் தொகை 5,000 அறிவித்திருந்த நிலையில் அதை 10,000 ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும், தற்காலிக பணியாளராக பணியாற்றி வருபவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×