search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளத்தில் தவறி விழுந்து இறந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி.
    X
    குளத்தில் தவறி விழுந்து இறந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி.

    ஜெயங்கொண்டம் அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி பலி

    தீபாவளியை கொண்டாட பாட்டி வீட் டுக்கு வந்த அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூர் அருகே உள்ள ஜமீன்மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஹரிணி (வயது 7). பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலசிங்கம். இவரது மகன் லோகேஷ் (6).

    அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஹரிணி 2-ம் வகுப்பும், லோகேஷ் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். பன்னீர்செல்வத்தின மாமியார் அருகிலுள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் தங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாட குழந்தை ஹரிணி விரும்பினார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் குழந்தைக்காக வாங்கிய புத்தாடைகளை எடுத்துக்கொண்டு ஹரிணியை அவரது பாட்டி வீட்டில் விடுவதற்காக பன்னீர் செல்வம் புறப்பட்டார்.

    அப்போது தம்பி மகன் லோகேஷ் தானும் செல்வதாக கூறினார். உடனே ஹரிணி, லோகேஷ் இருவரையும் மருக்காலங்குறிச்சியில் பன்னீர்செல்வம் விட்டு விட்டு வந்தார். நேற்று காலை புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடிய ஹரிணியும், லோகேசும் அந்த பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    இதற்கிடையே நேற்று மாலை அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். முதலில் குளத்தில் இறங்கிய லோகேஷ் தவறி உள்ளே விழுந்தான். நீச்சல் தெரியாத அவன் தண்ணீரில் தத்தளித்தான். உடனே அவனை காப்பாற்றுவதற்காக ஹரிணியும் உள்ளே இறங்கினார்.

    ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் ஒருசில நிமிடங்களில் மூழ்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராதததால் அவர்களுடன் விளையாடி மற்ற சிறுவர்கள் கூச்சல் போட்டனர். இதையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்தனர். தொடர் மழை காரணமாக குழந்தைகள் விழுந்த தண்ணீர் நிரம்பி இருந்தது. இளைஞர்கள் சிலர் குளத்திற்குள் இறங்கி நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஹரிணி, லோகேஷ் இருவரையும் பிணமாக மீட்டனர்.

    அவர்களது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடல்களை தருமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். மேலும் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு போலீசார் உடல்களை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளியை கொண்டாட பாட்டி வீட்டுக்கு வந்த அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×