என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.9லட்சம் வழிப்பறி-கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை தீவிர வேட்டை

    ராஜபிரகாஷ் கடைக்குள்இருந்து பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு காருக்கு வந்து கொண்டிருந்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ செல்லும் வழியில் காட்டு பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்லமுத்து, மூர்த்தி ஆகிய 2 பேரும் விற்பனையாளராக வேலை செய்து வருகின்றனர். மேற்பார்வையாளராக ஈரோடு மாவட்டம் பெருந்துறை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவரது மகன் ராஜபிரகாஷ் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனையான ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 350- ஐ கடையில் வைத்திருந்தனர். அந்த பணத்தை வங்கியில் கட்டுவதற்காக நேற்று காலை ராஜபிரகாஷ் பெருந்துறையில் இருந்து ஒரு காரில் தனது தம்பி ரமேசை அழைத்துக்கொண்டு டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

    டாஸ்மாக் கடைக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு பணத்தை எடுக்க கடைக்குள் ராஜபிரகாஷ் சென்றார். அவருடைய தம்பி ரமேஸ் காரை விட்டு இறங்கி வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் வந்தனர்.

    அவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மட்டும் ஹெல்மெட் அணிந்து இருந்தார். அதில் ஹெல்மெட் அணியாத  நபர் மட்டும் டாஸ்மாக் கடைக்கு சென்று ஒரு மதுபாட்டிலை வாங்கினார். இதற்கிடையில் ராஜபிரகாஷ் கடைக்குள்இருந்து பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு காருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மதுபாட்டிலை வாங்கி வந்த ஆசாமி தான் வைத்திருந்த கத்தியால் ராஜபிரகாசை மிரட்டி பணப்பையை பறித்தார். பின்னர்  மர்மநபர்கள்  2 பேரும் பணப்பையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.இதனால் பதறிப்போன ராஜபிரகாஷ்  உடனே நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 350-ஐ மர்ம ஆசாமிகள் பறித்துசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
    Next Story
    ×