search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தந்தையை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தாயுடன் குளத்தில் குதித்த மகன் மரணம்

    தந்தையை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுடைந்து தாயுடன் குளத்தில் குதித்த மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள வளையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). கட்டிட மேஸ்திரி.

    இவருடைய மனைவி விசாலாட்சி (30) தம்பதியின் மகன்கள் சந்தோஷ் (20). கோவையில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். மற்றொரு மகன் கோகுல் (19). தற்போது பிளஸ்-2 முடித்துள்ள இவரை கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தனர்.

    விஜயகுமார் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் செய்யாறு அருகே உள்ள செய்யாற்று வென்றான் கிராமத்தில் ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை திருடு போனது.

    இது சம்பந்தமாக செய்யார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் விஜயகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருட்டு வழக்கில் கணவனை அழைத்துச் சென்றதால் விசாலாட்சி மனமுடைந்தார். வாழ விருப்பமில்லாத அவர் தனது மகன் கோகுலை அழைத்துக்கொண்டு ஆரணி அடுத்த பையூர் சென்றார்.

    அங்குள்ள கல்குவாரி தண்ணீரில் மகனுடன் குதித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விசாலாட்சியை மீட்டனர். கோகுல் தண்ணீரில் மூழ்கினார். விசாலாட்சியை மீட்ட பொதுமக்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆரணி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தண்ணீரில் மூழ்கி பலியான கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சிறுவனின் உடலை அடக்கம் செய்ய வளையாத்தூர் கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்ற விஜயகுமாரை போலீசார் விடுவித்தனர்.

    வளையாத்தூர் வந்த விஜயகுமார் மகனுக்கு தந்தை செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் இருந்தார்.

    தன்னை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் மகன் இறந்து விட்டான் என வருந்தினார். நேற்று இரவு வீட்டின் மாடியில் விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திமிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயகுமார் உடலை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தந்தை மகன் இறந்த சம்பவம் ஆரணி, ஆற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×