என் மலர்
செய்திகள்

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பேசிய போது எடுத்த படம்
குழந்தைகளிடம் நல்லது, கெட்டதை பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும் - போலீஸ் ஐ.ஜி. பேச்சு
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நட்பு ரீதியாக பழகி நல்லது, கெட்டதை எடுத்துக்கூற வேண்டு்ம் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேசினார்.
அரியலூர்:
அரியலூரில், மாவட்ட போலீசார் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், அதற்கான தண்டனைகள் குறித்தும் ஐ.ஜி. பேசினார். மேலும் அவர் பேசுகையில், பாலியல் வன்கொடுமை குறித்து போலீசார் பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் நட்பு ரீதியாக பழகி நல்லது, கெட்டதை எடுத்துக்கூற வேண்டும். மேலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைக்கு 181, குழந்தைகள் தொடர்பான பிரச்சினைக்கு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜன், சமூக நல அலுவலர் சாந்தி, திட்ட அலுவலர் சாவித்திரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், மீனாட்சி, தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அருள்தாஸ் ஆகியோர் பேசினர். முடிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நன்றி கூறினார்.
இதையடுத்து வாரணவாசி கிராமத்தில் பொதுமக்களுக்கு, அரியலூர் சைபர் கிரைம் குறித்து ஐ.ஜி. விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அவர் போலீஸ் புதிய குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து, போலீசாரின் குடும்பத்தினருக்கு மூலிகை செடிகளை வழங்கினார். மேலும் அவர் ஆயுதப்படை போலீஸ் அலுவலக வளாகத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்திற்காக மரக்கன்று நட்டார்.
இதையடுத்து செந்துறை அருகே பொன்பரப்பி கிராமத்தில் செந்துறை போலீஸ் நிலையம் சார்பாக அமைக்கப்பட்ட பாய்ஸ் கிளப்பை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் நட்பை மேம்படுத்தும் வகையில் போலீசார் சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இவற்றில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் இறுதி போட்டியில் செந்துறை அணியும், இடையக்குறிச்சி அணியும் மோதின. இதில் இடையக்குறிச்சி அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.
அந்த அணிகளுக்கு பரிசுகளை வழங்கி ஐ.ஜி. பேசுகையில், வெற்றிக்கும், தோல்விக்கும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. விளையாட்டில் வெற்றியடைய உடல் வலிமையை விட மன வலிமை முக்கியம் சந்தோஷமாக திட்டமிட்டு விளையாடினால் வெற்றி நிச்சயம், என்றார். இதில் துணை சூப்பிரண்டு மதன், செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






