search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மதுராந்தகம் அருகே காவலாளி குத்திக்கொலை - 2 பேர் கைது

    மதுராந்தகம் அருகே காவலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழைய மாம்பாக்கம் பகுதியில் புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமனுக்கு சொந்தமான பெட்ரோல் நிலையத்திற்கான பணி நடந்து வருகிறது. அதற்கு அதே பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (வயது 66) காவலாளியாக இருந்தார்.

    நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாண்டித்துரை ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் மதுராந்தகம் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாண்டித்துரையை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டார்.

    இந்த கொலையில் ஈடுபட்டது நண்பர்களான செங்கல்பட்டு வீரபத்திரனார் தெருவை சேர்ந்த கார்த்திக் என்ற முண்டக்கண் கார்த்திக் (32) மற்றும் செங்கல்பட்டு தட்டான் மலைத்தெருவை சேர்ந்த உசேன் பாஷா (28) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பழவேலி என்ற இடத்தின் அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்தவர்களிடம் ரூ.1,100-ஐ பறித்து சென்றது தெரியவந்தது. வழிப்பறி சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தின் அருகே பதுங்கி இருந்தது தெரியவந்தது. செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை அவர்கள் இருவரையும் கைது செய்தார்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் பாண்டித்துரையிடம் பணம் கேட்டு மிரட்டியபோது அவர் பணம் இல்லை என்று சொன்னதால் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். முண்டக்கண் கார்த்திக் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் 4 கொலை முயற்சி வழக்கு, ஒரு கஞ்சா வழக்கு உள்ளிட்ட 12 வழக்குகளும். உசேன் பாஷா மீது ஒரு கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகளும் செங்கல்பட்டு டவுன் போலீசில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×