search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    புதுவையில் 3 நாளில் ரூ.20 கோடிக்கு மது விற்பனை

    புதுவையில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 3 பேரை வில்லியனூரில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் 42 நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

    ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மதுபான கடைகள் கடந்த 8-ந் தேதி திறக்கப்பட்டது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுபார்கள், சுற்றுலா பிரிவு பார்களை திறக்க அனுமதி இல்லை.

    42 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

    இதனால் மதுக்கடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மது பிரியர்கள் புதுவை வந்து மது பானங்களை வாங்கி சென்றனர்.

    கடலூர் - புதுவை எல்லையான சோரியாங்குப்பத்தில் மது விற்பனை அதிக அளவில் இருந்தது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து மது வாங்கி செல்கிறார்களா? என போலீசார் கண்காணித்தனர்.

    மேலும் பொது இடங்களில் மது அருந்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். வழக்கமாக ஒரு நாளில் புதுவை மாநிலம் முழுவதும் சுமார் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும்.

    கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

    9-ந்தேதி ரூ.6 கோடிக்கும், 10-ந்தேதி ரூ.7 கோடிக்கும் மது விற்பனை ஆகி உள்ளது. 3 நாட்களில் ரூ.20 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது.

    மதுக்கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு தான் மது விற்பனை செய்ய வேண்டும் என கலால்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மதுக்கடை ஊழியர்களும் முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மது கடைகளில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என கண்காணிக்க கேட்டுக் கொண்டார்.

    புதுவையில் மது கடைகள் திறக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    மது கடைகளால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    புதுவையில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 3 பேரை வில்லியனூரில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் திருச்சியை சேர்ந்த சசிகுமார், வடலூர் கார்த்திக், சென்னை சபரிநாதன் என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்து ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பாட்டில்கள் கலால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×