search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுச்சேரியில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்? - இன்று அறிவிப்பு வெளியாகும்

    புதுச்சேரியில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையவில்லை. நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி வந்தனர்.

    இதையடுத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையில், கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஜவுளிக்கடை, வணிக நிறுவனங்களை திறக்க அனுமதியில்லை. பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொற்று பாதிப்பு எதிர்பார்த்த அளவு குறையவில்லை. எனவே ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 1-ந் தேதி முதல் 7-ந்தேதி (இன்று) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சுய தொழில் செய்பவர்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதாவது மின்சாரம், குடிநீர் குழாய், குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் வாகனங்கள் பழுது நீக்குதல் போன்ற பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டன.

    தற்போதைய ஊரடங்கு நீட்டிப்பு இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைகிறது. ஊரடங்கால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை 1000-க்கு கீழ் சென்றது. இறப்பு விகிதமும் சரிந்தது.

    எனவே புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். தற்போது தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுவையிலும் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம். இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×