search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் இருந்து சிவகாசி சென்ற அரசு பஸ்சில் ஆர்வமுடன் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டனர்.
    X
    விருதுநகரில் இருந்து சிவகாசி சென்ற அரசு பஸ்சில் ஆர்வமுடன் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டனர்.

    118 டவுண் பஸ்களில் பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதி - விதிமீறலை தவிர்க்க வலியுறுத்தல்

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் கையெழுத்திட்ட 5 உத்தரவுகளில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்துக்கழக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்வதற்கான உத்தரவும் ஒன்றாகும்.
    விருதுநகர்:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடன் கையெழுத்திட்ட 5 உத்தரவுகளில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்துக்கழக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்வதற்கான உத்தரவும் ஒன்றாகும்.

    அந்த வகையில் போக்குவரத்து கழக பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்வதற்கான உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 118 போக்குவரத்துக்கழக சாதாரண கட்டண டவுன் பஸ்களில் நேற்று அதிகாலை முதலே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதிலும் குறிப்பாக கிராமங்களில் இருந்து வரும் பெண்கள் இந்த உத்தரவினால் பெரும் பயனடையும் நிலை இருந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நேற்று முன்தினமே போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இதுபற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மேலும் நேற்று காலை டவுன் பஸ்கள் புறப்படும் போதே பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆதலால் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்ட நிலையில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை.

    ஆனாலும் இந்த உத்தரவால் எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்ற கணக்கு தெரிய வாய்ப்பில்லை. அதற்கான அடையாள அட்டை அல்லது பஸ்பாஸ் வழங்கினால் தான் அது பற்றிய கணக்கு தெரியவரும். அதுபற்றி அரசு எந்த அறிவுறுத்தல் வழங்கப்படாத நிலையில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு டிக்கெட் ஏதும் வழங்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விருதுநகர் அருகே உள்ள குளத்தூர் குளம் கிராமத்தில் இருந்து விருதுநகர் பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை பார்ப்பதற்காக வரும் செல்வி, மாரீஸ்வரி என்ற 2 பெண்கள் கூறியதாவது:-

    வீட்டு வேலை மூலம் மாதம் ரூ.5000 வரை ஊதியம் பெறும் நிலையில் பஸ்சுக்காக மட்டும் மாதம் ரூ. 800 வரை செலவழிக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த தொகை தங்களுக்கு மீதமாகும் நிலையில் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியதோடு இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    ஒரு போக்குவரத்து கழக டவுன் பஸ்சில் பயணம் செய்த 55 பயணிகளில் 38 பேர் இலவசமாக பெண்கள் பயணம் செய்ததாக நடத்துனர் ஒருவர் தெரிவித்தார்.

    சாதாரண கட்டண டவுண் பஸ்களில் மகளிர் இலவசபயணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்து கழக பஸ்களில் அரசு விதிமுறையை மீறி பயணிகளை நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் நிலையும் பஸ் படிக்கட்டு வரை பயணிகள் நின்றுகொண்டு பயணம்செய்ய அனுமதிக்கும்நிலை இருந்தது.

    விருதுநகரிலிருந்து வத்திராயிருப்பு சென்ற போக்குவரத்து கழக பஸ்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர் இதேபோன்று பல பஸ்களில் விதிமுறைகளை மீறி பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனவே இதனால் நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். எனவே போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினர் பஸ்களில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி 50 சதவீத பணிகளை பயணிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×