என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் அருகே ஆசிரியைக்கு கொரோனா - மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

    விருதுநகர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே சத்திரரெட்டிய பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நடந்து வருகிறது.

    இந்த தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்தபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அலுவலர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளும் செய்முறை தேர்வுக்காக பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் பள்ளியில் பணியாற்றும் 34வயது முதுகலை ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரசு வழிகாட்டு நெறி முறைப்படி பள்ளியில் பணியாற்றும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

    ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் பள்ளி நிர்வாகத்தாலோ அல்லது மாவட்ட பள்ளிக் கல்வித் துறையாலோ எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது ஆசிரியைக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது பற்றிய தகவலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவித்த போதிலும் பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தல் வழங்கப் படாத நிலையில் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளனர். எனவே இன்றுடன் செய்முறை தேர்வு முடிவடையும் நிலையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும், தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் அலுவலர் களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.

    மேலும் அரசு வழிகாட்டு நெறி முறைப்படி நோய் தொற்று ஏற்பட்டு உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யாத மாவட்ட பள்ளிக் கல்வித்துறையிடம் விசாரணை நடத்தி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீதும் பள்ளித்தலைமை ஆசிரியர் மீதும் மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.
    Next Story
    ×