என் மலர்
செய்திகள்

பாதாள சாக்கடை நிறைந்து சாலையில் கழிவு நீர் ஓடுவதை படத்தில் காணலாம்.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடும் அவல நிலை உள்ளதால் இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மாவட்ட மக்கள் தவித்து வரும் நிலையில் பல்வேறு நகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதால் நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில் விருதுநகரில் பாதாள சாக்கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் நகராட்சி நிர்வாகத்திடம் இதுபற்றி முறையிடப்பட்டுள்ளது.
இதனிடையே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கழிவுநீர் வெளியேறி அரசு ஆஸ்பத்திரியின் கிழக்கு பகுதியில் உள்ள கால்வாய் வழியாக மல்லாங்கிணறு ரோட்டில் சாலையின் ஓரத்தில் தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம், அரசு அலுவலகங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஆஸ்பத்திரி மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே தற்போது நோய் பாதிப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை முறையாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story






