search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியல்
    X
    மறியல்

    என்.ஆர். காங்கிரசார் மீது நடவடிக்கை கோரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பாளர்கள் மறியல்

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. காலை 10 மணியளவில் என்.ஆர். காங்கிரசை சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடிக்கு அருகில் ஜக்கு சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்களை வீசியபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி போட்டியிடுகிறார்.

    இவரை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேதுசெல்வம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உட்பட மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. காலை 10 மணியளவில் என்.ஆர். காங்கிரசை சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடிக்கு அருகில் ஜக்கு சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்களை வீசியபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இதற்கு பிற கட்சிகளின் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பிற வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    காமராஜர் சாலை தமிழ்அன்னை நகர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேதுசெல்வம், நாம்தமிழர் ரமேஷ், மக்கள் நீதிமய்யம் ராஜேந்திரன் மற்றும் பலர் ஒன்று கூடினர்.

    தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் செய்தனர். தேர்தல் அதிகாரி சம்பவ இடத்துக்கு வரவில்லை. ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் காமராஜர் சாலை சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருகில் வாக்குச்சாவடி இருந்ததால் பதட்டம் ஏற்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மறியலை கைவிடும்படி வலியுறுத்தினர். வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் மறியலை கைவிட வில்லை. இதனையடுத்து போலீசார் அவர்களை வலுக் கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இருப்பினும் போலீசார் அவர்களை விடாப்பிடியாக இழுத்து அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சுமார் அரைமணிநேரம் பரபரப்பும், பதட்டமுமாக இருந்தது.

    Next Story
    ×