search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாத்தூர் அருகே கள்ள நோட்டு தயாரித்த கும்பல் சிக்கியது - ஜெராக்ஸ் எந்திரம் பறிமுதல்

    சாத்தூர் அருகே கள்ள நோட்டு தயாரித்த கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஜெராக்ஸ் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர்:

    அண்மைக்காலமாக தமிழகத்தில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    தென்மாவட்டங்களில் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விடும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.அதன் விபரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று இரவு மது குடிக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் மதுபாட்டில்களை வாங்கி விட்டு விற்பனையாளரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

    அந்த நோட்டை பார்த்த போது விற்பனையாளருக்கு சந்தேகம் எழுந்தது. வழக்கமான ரூபாய் நோட்டை விட அதில் சில மாற்றங்கள் இருந்தன. இதுகுறித்து விற்பனையாளர் உடனே சாத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 500 ரூபாய் நோட்டை சோதித்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது. இதையடுத்து கள்ள நோட்டை மாற்ற முயன்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சத்திரப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சந்தோஷ்குமார் (வயது 36) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள 500, 100 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சந்தோஷ் குமாரிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டு தயாரிக்க பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் சாமி (26) மைதீன் (25) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ் குமார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் கள்ளநோட்டை எங்கெங்கு மாற்றினார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×