search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிவகாசி பகுதியில் பெட்டிக்கடைகளில் மது விற்பனை அதிகரிப்பு - போலீசார் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா?

    சிவகாசி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தற்போது அதிக அளவில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடராமல் இருக்க போலீஸ் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு அரசு விதிமுறைப்படி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் பகல் 10 மணிக்கு பின்னர் தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற நிலை இருப்பதால் குடிமக்கள் வசதிக்காக பார்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால் போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. சில பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து தற்போது பார்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது குறைந்துள்ளது.

    ஆனால் குடிமக்கள் பகல் நேரங்களில் போதிய மதுபாட்டில்கள் கிடைக்காமல் அவதி அடைந்தனர். இதனால் பலர் மது பாட்டில் களை வாங்கி பொது இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர். தற்போது ஒரு படி மேலே சென்று சில பெட்டிக்கடைக்காரர்கள் தங்கள் பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்வது போல் சாதாரணமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கட்டிங் அளவுகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இதுபோன்று விற்பனை குடிமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குடிமக்கள் தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு செல்வதை காட்டிலும் பெட்டிக்கடைகளில் கட்டிங் முறையில் மதுவகைகளை வாங்கி குடிப்பதை அதிக அளவில் விரும்பி வருகிறார்கள்.

    மதுவிற்பனைக்கு அரசு கால நிர்ணயம் செய்து இருக்கும் நிலையில் சிவகாசி பகுதியில் மட்டும் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது குற்றச்சம்பவங்கள் ஏற்பட அதிக வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

    எனவே விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சிவகாசி பகுதியில் பெட்டிக்கடைகளில் மது விற்பனை செய்வதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மதுவிலக்கு போலீஸ் பிரிவு அதிகாரிகள் அடிக்கடி சிவகாசி பகுதியில் சோதனை செய்து வெளிமாநில மதுவிற்பனையையும், பெட்டிக்கடைகள் மற்றும் பார்களில் மதுவிற்பனை செய்வதை தடுத்து வந்தனர்.

    எனவே மது விற்பனை நடைபெறுகிறதா என பெட்டிக்கடைகளில் மதுவிலக்கு போலீசார் மீண்டும் சோதனை செய்ய வேண்டும். அவ்வாறு மது விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

    Next Story
    ×