என் மலர்
செய்திகள்

முகவூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
வேகமாக நிரம்பும் அணைகள், கண்மாய்கள் - ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
விருதுநகரில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அணைகள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காரியாபட்டி தாலுகா காரைக்குளம் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காரைக்குளம் கண் மாய் மராமத்து பணி செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
காரை குளம் கண்மாய் மழை நீரால் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. ஏனென்றால் கண்மாய்க்கரை மிகவும் மோசமாக உள்ளதால் நீர் நிரப்ப முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் எசலிமடை, தாமரைக்குளம் மற்றும் காணல் ஓடை பகுதிகளிலிருந்து தண்ணீர் காரைக்குளம் கண்மாய்க்கு வருவதால் கண்மாய் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தோப்பூர் முருகன் ஆகியோர் சென்று பொதுமக்களை சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு தண்ணீர் அதிக அளவில் ஊருக்குள் வராமல் அடைத்தும் வேறொரு பகுதியில் தண்ணீரை திருப்பி விட்டனர்.
இதனால் பொதுமக்கள சற்று நிம்மதி அடைந்தனர். காரைக்குளம் கண்மாயை தூர்வாரி கரையை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் கிராமத்தில் இருந்து கலிங்கப்பட்டி செல்லும் சாலையில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கீழராஜகுலராமன் கண்மாய் நிறைந்து, தற்போது மடை தட்டி தண்ணீர் செல்கிறது. மேலும் கண்மாய்க்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததன் காரணமாக, பாதுகாப்பு கருதி கண்மாயின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் வெள்ளம் போன்று ஓடுகிறது. கண்மாயில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தற்போது தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தரைப்பாலத்தை அடுத்துள்ள கோபாலபுரம், சிவலிங்காபுரம், நரிக்குடி, வடகரை, தென்கரை உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தற்போது முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாப்பட்டி, கான்சாபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூர், அழகாபுரி, சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ெதாடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
ஆதலால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியில் இருந்து பிளவக்கல்பெரியாறு அணை செல்லும் சாலையில் உள்ள பட்டுப்பூச்சி மற்றும் ரகுமத் நகர் பகுதியில் 2 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
தொடர் மழையினால் சேத்தூர், தேவதானம். சோலைசேரி, முகவூர், முத்துசாமிபுரம். தளவாய்புரம். செட்டியார்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கண்மாய்கள் தற்போது நிரம்பி மறுகால் செல்கிறது.
இந்த நீர் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பெய்த தொடர் மழையினால் சாஸ்தா கோவில் அணை நிரம்பி வழிகிறது.
ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, ராசாப்பட்டி, மேலாண்மறைநாடு, புளியடிபட்டி கோபாலபுரம் சுண்டங்குளம், சீவலப்பேரி, உப்புபட்டி, எதிர்கோட்டை, மேல பழையாபுரம், கண்மாய் பட்டி, அருணாசலபுரம், நரிக்குளம், கோவிலூர். ஆகிய கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகின்றது.
ஆதலால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டி அருகே சூரனூர் கண்மாயில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த கண்மாய் கரை முழுவதும் மழையால் அரிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமாக உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால் கண்மாய் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. தொடர் மழையால் காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளிலுள்ள கண்மாய்கள் பெரும்பாலும் நிரம்பிய நிலையில் உள்ளது. எனவே அனைத்து கண்மாய்களையும் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சூரனூர் கண்மாயை பலப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






