search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மலேசியாவில் உணவு-மருத்துவ வசதி கிடைக்காததால் திருச்சுழி வாலிபர் பலி

    கொரோனா தொற்று காரணமாக வேலை கிடைக்காததால் மலேசியாவில் உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்காததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சுழி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    விருதுநகர்:

    பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்களில் பலர் அதனை சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுவதோடு, சில நேரங்களில் தங்கள் உயிரையும் இழந்து விடுகின்றனர்.

    இது போன்று ஒரு நிலை விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த வாலிபருக்கு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள காரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 37). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்றார்.

    அவரது மனைவி கோகிலாதேவி. 2 குழந்தைகள் உள்ளனர். காரைக்குளத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதையும் பாதித்தது. இதில் பலருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டது. கருப்பசாமிக்கும் சரியான வேலை கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.

    இது பற்றி அவர் தனது மனைவியிடம் போனில் தெரிவித்துள்ளார். அப்போது சரியான வேலை இல்லாததால் சாப்பிட வழியின்றி தவிப்பதாகவும், ஊருக்கு திரும்ப முடியாத நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து கோகிலாதேவி, மேலூரைச் சேர்ந்த ஏஜெண்டை தொடர்பு கொண்டு தனது கணவரை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம், கோகிலாதேவி ஒரு மனு கொடுத்தார்.

    அதில், மலேசியாவில் சாப்பாடு மற்றும் மருத்துவ உதவி கிடைக்காமல் தவிக்கும் கணவர் கருப்பசாமியை மீட்டுத்தர வேண்டும். இல்லாவிட்டால் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சூழலில் மலேசியாவில் உடல் நலக்குறைவால் கருப்பசாமி இறந்து விட்டதாக அவருடன் வேலை பார்ப்பவர்கள், கோகிலாதேவிக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர் கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கதறி அழுதார். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தார்.
    Next Story
    ×