என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
    X
    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    ஆயுர்வேத மருத்துவர்களுக்கு நவீன அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்க கூடாது - அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

    ஆயுர்வேத மருத்துவர்களின் நவீன மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    ஆயுர்வேத மருத்துவர்களின் நவீன மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:-

    மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் ஒரே நாடு, ஒரே மருத்துவ முறை கலைக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவ கல்வியில் பக்கவாட்டு நுழைவு முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும். மேலும் ஒரே நாடு, ஒரே மருத்துவ முறை என கூறி இதர பாரம்பரிய மருத்துவ முறைகளை புறக்கணிக்கும் போக்கும் நவீன மருத்துவத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

    நவீன அறிவியல் மருத்துவத்தில் சமஸ்கிருத சொற்களை புகுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதனால் நவீன மருத்துவ முறைக்கு பாதிப்பு ஏற்படும். பழைய மருத்துவ முறைகளில் மருந்துகளில் உள்ள மூலக்கூறுகளின் பயன்பாட்டை மேம்படுத்தாமல் ஒன்று கலத்தல் என்ற பெயரில் நவீன அறிவியல் மருத்துவ முறைகளில் பழைய மருத்துவ முறைகளை ஒன்றிணைப்பது நவீன மருத்துவத்தை சீர்குலைப்பது ஆகும். இது சரியல்ல.

    இதுவரை ஏற்பட்டுள்ள மருத்துவ அறிவியல் வளர்ச்சியை நாசம் செய்வதாகும். ஆயுர்வேதம் மற்றும் நவீன அறிவியல் மருத்துவர்களிடையே முரண்பாடு மோதலை அதிகரிப்பதாகும். மருத்துவ அறிவியலையும் அதன் மதசார்பற்ற தன்மையையும், வளர்ச்சியையும் பாதுகாக்க வேண்டும்.

    இதில் அக்கறை உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் சீர்குலைவு வேலைகளை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜபாளையம் கிளை தலைவர் டாக்டர் ஜவகர்லால் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் சுகுமார், விருதுநகர் மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் ரூபன் ராஜ், சண்முகராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

    Next Story
    ×