search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த படம்.
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த படம்.

    சுக்கிரவார்பட்டியில் கால்நடை மருத்துவ கிளை நிலையம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

    சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    சிவகாசி:

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி கிராமத்தில் ரூ.4 லட்சம் செலவில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையம் அமைக்க கடந்த 15.10.2020 அன்று அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சுக்கிரவார்பட்டியில் புதிய கால்நடை மருத்துவ கிளை அமைக்கப்பட்டது.

    இதன் திறப்புவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு புதிய கால்நடை மருத்துவ கிளையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 1,026 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுமாடு வீதம் 1,026 பசுமாடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.3 கோடியே 91 லட்சத்து 74, 510 செலவு செய்துள்ளது.

    அதே போல் 6,229 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே6 லட்சத்து 44, 028 செலவில் 24,916 ஆடுகள் வழங்கி உள்ளது. இதே போல் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 550 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 83 ஆயிரத்து 750 செலவில் 18, 750 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் 9 கால்நடை மருந்தகங்கள், 6 கால்நடை கிளை நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    2020-2021-ம் ஆண்டில் 400 பயனாளிகளுக்கு விலையில்லா கறவைபசுக்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 4,767 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன. இதில் சிவகாசி தொகுதியில் 482 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்படும். அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்று மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கண்ணன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், கருப்பசாமி, பொன்சக்திவேல், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் சுபாஷினி, ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம், பஞ்சாயத்து தலைவர் பாண்டியம்மாள், துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×