search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் கண்ணன்
    X
    கலெக்டர் கண்ணன்

    நோய் தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் - கலெக்டர் கண்ணன் வேண்டுகோள்

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நோய் தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு விதிமுறைகளின்படி பொது இடங்களில் முக கவசம் அணிந்து வருவதையும், சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    இதன்மூலம் நோய் பரவல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலையில் நோய் பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் பொது மக்கள் பொது இடங்களுக்கு வரும் போது முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் முற்றிலுமாக தவிர்க்கும் நிலை இருந்து வருகிறது.

    இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தும் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வது நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தும். இதனால் பாதிப்பு ஏற்படுவது நமக்குத்தான் என்ற எண்ணத்தில் பொதுமக்கள், அரசு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.

    இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பு குறைந்து உள்ளதால் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்து பகுதிகளிலும் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டியது பொது மக்களின் கடமையாகும். தொடர்ந்து பொது இடங்களில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி அபராதம் விதிக்கவும், தேவைப்பட்டால் மேல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டியது வரும். மாவட்டத்திலிருந்து நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டிய கடமை மாவட்ட மக்களுக்கு உண்டு. வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் அரசு அறிவித்துள்ள நோய்தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை வணிக நிறுவனத்தினர் உறுதி செய்ய வேண்டும்.

    இல்லையேல் விதிமுறைகளின்படி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும். தனியார் மற்றும் போக்குவரத்து கழக பஸ் நிர்வாகத்தினரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை பின்பற்றி பஸ்களை இயக்க வேண்டும். இல்லையேல் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்.

    எனவே மாவட்ட மக்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் மாவட்டத்தில் நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க அரசு அறிவித்துள்ள நோய்தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். விதிமுறைகளை முறையாக பொது இடங்களில் கடைபிடிக்கப்படுவதை கண்காணிப்பு அதிகாரிகள் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×