search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்களை படத்தில் காணலாம்.
    X
    வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்களை படத்தில் காணலாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளத்தில் சிக்கிய மற்றொருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் செண்பக தோப்பு பகுதி உள்ளது. இங்குள்ள நீரோடைகள் மற்றும் அருவிகளுக்கு ஏராளமானோர் குளிக்கச் செல்வார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.

    கண்மாய் மடை திறக்கப்பட்டதால் அதிகளவு தண்ணீர் வெளியேறி மீன் வெட்டி அருவி, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 22), முத்து ஈஸ்வரன் (21), கோபி (22), சசிகுமார், சத்தியபிரகாஷ் ஆகியோர் செண்பகதோப்பு பேய்மடை ஓடையில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இதில் பால்பாண்டி, கோபி, முத்து ஈஸ்வரன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மற்ற 2 பேரும் வேகமாக கரையேறி உயிர் தப்பினார்கள். இதுகுறித்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு, மீட்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. இதில் பால்பாண்டி, முத்து ஈஸ்வரன் ஆகியோர் பிணமாக கரை ஒதுங்கினார்கள். அவர்கள் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

    வெள்ளத்தில் சிக்கிய கோபி கதி என்ன என்று தெரியவில்லை? அவரை தீயணைப்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    பலியான நண்பர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×