search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    வில்லியனூர் அருகே வாலிபரை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி

    வில்லியனூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள பூவரசங்குப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் காசி (வயது 24), வில்லியனூர் அருகே மேல்திருக்காஞ்சியில் உள்ள கருங்கல் ஜல்லி விற்கும் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் காசி புறப்பட்டுச் சென்றார். உறுவையாறு நான்குமுனை சந்திப்பு பகுதியில் வந்தபோது அவரை திடீரென்று 2 பேர் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காசியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் பலத்த காயமடைந்த காசி ரத்த வெள்ளத்தில் அங்கேயே கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய காசி, தனது முதலாளியின் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். எனவே ஆள் மாறாட்டத்தில் அவரை மர்மநபர்கள் கொலை செய்ய முயன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் காசியை தாக்கிய மர்மநபர்கள் முககவசம் அணிந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×