search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    வீட்டு வரி ரசீது கேட்டு வந்தவர்கள் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா

    ஜெயங்கொண்டத்தில் வீட்டு வரி ரசீது கேட்டு வந்தவர்கள் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டிய வீடுகளுக்கு வீட்டு வரி ரசீது மற்றும் காலி மனைகளுக்கு செலுத்தப்பட்ட வரிக்கான ரசீது, புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதி போன்றவற்றுக்காக சம்பந்தப்பட்டவர்கள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் மேலக் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த கணேசன், தியாக ராஜன், ஜெயங்கொண்டம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த ராமர், செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், யோக ராஜ், கவிதா, செல்வம் ஆகியோர் வீட்டு வரி ரசீது பெற சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியில் மனு அளித்திருந்தனர். இதையடுத்து அவர்கள் ரசீது பெற நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு ரசீது வழங்கப்படாததால் ஆத்திரமடைந்தனர்.

    அப்போது வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லை. இந்நிலையில் ஆணையர்(பொறுப்பு) அறச்செல்வி காரில் வெளியே செல்வதற்காக வந்தார். அவர் ஏறியபின்னர், கார் செல்ல தொடங்கியபோது, அவர்கள் தங்களுக்கு ரசீது வழங்கும்படி அவரிடம் கேட்டனர். மேலும் தங்களுக்கு ரசீது வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி நகராட்சி அலுவலக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதில் அளிக்காத நிலையில் ஆணையர் காரில் இருந்து இறங்கி நடந்து வெளியில் சென்றுவிட்டார்.

    இதையடுத்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நுகர்வோர்கள் கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே கும்பகோணம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கூடுதல் பொறுப்பாக ஜெயங்கொண்டத்தையும் கவனித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக அவர் பெரும்பாலும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு வருவதில்லை. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகமான மனுக்கள் தேங்கியுள்ளன. உரிய பதில் அளிக்க அதிகாரிகள் இல்லாததால் நகராட்சிக்கு பல்வேறு பணிகள் காரணமாக வரும் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகளிடையே உள்ள கருத்து மோதலும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஒருவர் இறந்து ஆறு மாதங்களாகியும், அரசு அறிவித்த இறுதிச்சடங்கு செலவு தொகையான ரூ.2,500 அவருடைய குடும்பத்திற்கு தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் பல கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களை காணவில்லை என்று அதிகாரி தரப்பில் கூறப்படுவ தாகவும், மீண்டும் மனு கொடுக்குமாறு கூறுவதாகவும் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×